மத்திய பிரதேச மாநிலத்தில் விபத்தில் சிக்கிய நபரை ஜேசிபி இயந்திரம் மூலம் மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் பைக்கில் சென்ற ஒரு இளைஞர் கிடௌலி சாலையில் விபத்துக்குள்ளானார். அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு 108 ஐ ஆம்புலன்ஸ் சேவையை அழைத்துள்ளனர் . ஆனால் ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் தொடர்புடைய நிறுவனம் மாறியதால் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. ஆம்புலன்ஸ் அருகிலுள்ள நகரத்திலிருந்து வருவதற்கு தாமதமானதால் , கிடௌலி சாலையில் விபத்துக்குள்ளான அந்த இளைஞர் எலும்பு முறிவு காரணமாக வலியில் துடித்துள்ளார். மூன்று முதல் நான்கு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் அந்த பகுதியில் இருந்தும் யாரும் உதவ முன்வரவில்லை .
மேலும் உதவி செய்யுமாறு கேட்டதற்கு மறுத்துள்ளனர். இதனையடுத்து உள்ளூர் ஜன்பத் பஞ்சாயத்து உறுப்பினரும் ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளருமான புஷ்பேந்திர விஸ்வகர்மா தனது வாகனம் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முடிவு செய்துள்ளார். விபத்து அவரது கடையின் முன்னதாகத்தான் நடந்திருக்கிறது. இதனையடுத்து ஜேசிபி இயந்திர ஓட்டுநர் தனது வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முன்வந்தார். அதன் அடிப்படையில் ஜேசிபி இயந்திரத்தின் மணல் ஏற்றிச்செல்லும் பகுதியில் , விபத்துக்குள்ளானவரை ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.
இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த மாதம், மத்திய பிரதேச மாநிலத்தின் நீமாச் மாவட்டத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் ஒருவரை ஜேசிபி இயந்திரம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர் . கடுமையான வெள்ளம் காரணமாக ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாததால் பெண்ணை ஜேசிபி இயந்திரத்தில் ஏற்றிச்செல்ல நேரிட்டது அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்