AC Temp Update: ஏர் கண்டிஷனர்களில் 20 டிகிரி செல்சியஸிற்கு குறைவாக வெப்பநிலையை குறைக்க கட்டுப்பாடு விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
ஏசி-யில் புதிய அப்டேட்:
பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் ஏர்-கண்டிஷனர்களின் (AC) வெப்பநிலையை, ஸ்டேண்டர்டாக மாற்றும் நோக்கத்தில் மத்திய அரசு புதிய நடவடிக்கையை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, ஏசிக்களில் இனி 20 டிகிரி செல்சியஸிற்கு குறைவாகவும், 28 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாகவும் வெப்பநிலையை மாற்ற முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஏசிக்களுக்கான புதிய தரநிலைகள் தொடர்பான விதிகள் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, ஏசி மூலம் 20 டிகிரி செல்சியஸிற்கு குறைவாக அறையை குளிரூட்ட முடியாது. அதேபோல, 28 டிகிரி செல்சியஸிற்கு மேலாக அறையை சூடாக்க முடியாது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏசி அப்டேட் - காரணம் என்ன?
வெப்பநிலையை நிர்ணயித்தலில் பரிசோதனை முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் மட்டுமின்றி வாகனங்களில் உள்ள ஏசி அமைப்புகளுக்கும் பொருந்தும். காலநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு மற்றும் குளிர்ச்சியூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தரப்பில் விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆற்றலை திறம்பட பயன்படுத்துவதை அதிகரிப்பது, திடீரென மின்சார தேவை அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதோடு, பயனர்களுக்கான மின்சார கட்டணமும் குறையும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
தற்போதைய ஏசிக்களின் நிலை:
தற்போது இந்திய சந்தையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களில், பலதரப்பட்ட ஏசி மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் அதிகபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் வரை அறையின் வெப்பநிலையை குறைக்க முடியும், அதே நேரம் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்த முடியும். இந்நிலையில் புதிய விதிகள் அமலுக்கு வந்தால், ஏற்கனவே உள்ள அம்சங்கள் திருத்தப்பட்டு ஏசியின் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸிற்குள் கட்டுப்படுத்த முடியும்.
20 டிகிரி செல்சியஸ் போதுமா?
காலநிலை மாற்றம் மற்றும் மின்சார கட்டணம் குறையும் என அரசு தரப்பில் கூறினாலும், கோடை காலங்களிலும் சுட்டெரிக்கும் வெயிலை எதிர்கொள்ள 20 டிகிரி செல்சியஸ் என்ற கட்டுப்பாடு சாதகமாக இருக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏப்ரல் தொடங்கி ஜுன் மாதம் வரையில் வெப்பம் வாட்டி வதைக்க, மக்கள் வீட்டிலேயே தஞ்சமடைந்து ஏசியின் மடியிலேயே படுத்துக்கிடக்கின்றனர். இரவின் முறையான தூக்கம் இல்லாவிட்டால் உடல்நிலை மோசமாவதை கருத்தில் கொண்டு, நடுத்தர மக்கள் கூட ஏசியை நாடுகின்றனர். காரணம் , கோடையில் அந்த அளவிற்கு புழுக்கம் ஏற்பட்டு வியர்வை கொட்டுகிறது. இப்படி இருக்கையில், ஏசியில் கொண்டுவரப்படும் திருத்தங்கள் எப்படி பலனளிக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.