இந்தியாவில் மொத்தம் உள்ள 30 மாநிலங்களில் 12 மாநிலங்களில் பா.ஜ.க. தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அடுத்தாண்டு நாட்டின் மிகப்பெரிய மாநிலமும், அதிகளவிலான சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலமுமான உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் வரும் 2022-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.


சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் எந்த கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் என்பதை ஏபிபி மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் முடிவில் தெரியவந்துள்ளது. அவற்றை மாநில வாரியாக கீழே காணலாம்.


உத்தரபிரதேசம்:




உத்தரபிரதேசம் மாநிலத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. வரும் சட்டசபை தேர்தலில் 263 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும், 41.8 சதவீத வாக்குகளை பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி கட்சி இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வரான பகுஜன் சமாஜ்வாதி கட்சி மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்றும் முடிவுகள் கூறுகின்றன.


உத்தரகாண்ட் :


உத்தரகாண்டில் திராத் சிங் ராவத் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. 70 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் 44 முதல் 48 இடங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




எதிர்க்கட்சி வரிசையில் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அமரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் 19 முதல் 23 இடங்கள் வரை சட்டமன்றத்தில் இடம்பிடிப்பார்கள் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. உத்தரகாண்டில் அறிமுக கட்சியாக களமிறங்கும் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. பிற கட்சிகள் 2 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.


கோவா :


கோவா மாநிலத்தில் தற்போது பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. மொத்தம் 40 சட்டசபைகள் கொண்ட கோவா சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. 24 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.  தற்போதைய முதல்வர் பிரமோத் சாவந்தே முதல்வர் வேட்பாளராக தொடர 33 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.




இந்த மாநிலத்தில் தற்போதைய எதிர்க்கட்சியான காங்கிரசை காட்டிலும் ஆம் ஆத்மி கட்சி 22.2 சதவீத வாக்குகள் பெற்று, 6 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 15.4 சதவீத வாக்குகள் பெற்று 6 தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பின் முடிவுகளில் வெளியாகியுள்ளது.


மணிப்பூர் :




மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 28 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. 21 இடங்களை மட்டுமே பா.ஜ.க. கைப்பற்றியிருந்தாலும், பிற கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், இந்த மாநிலத்தில் பா.ஜ.க. 34 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 20 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பஞ்சாப் :




பஞ்சாப் மாநிலத்தில் தற்போது கேப்டன் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சம பலத்துடன் காணப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையாக 55 இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 29 சதவீத வாக்குகள் பெற்று தற்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் 42 இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.