உயர்நீதிமன்றங்களில் வரும் வழக்குகளில் ஒரு சில நேரங்களில் நீதிபதிகள் சில அதிரடி உத்தரவுகள் தருவது வழக்கம். அந்தவகையில் தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கிற்கு நீதிபதி வழங்கியுள்ள உத்தரவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த உத்தரவை பலரிடமும் பாராட்டை பெற்று வருகிறது. 


கேரள உயர்நீதிமன்றத்தில் 21வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கருகலைப்பு தொடர்பாக மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனக்கும் தன்னுடைய கணவருக்கும் திருமண வாழ்க்கை சரியாக இல்லாத்தால் இந்தக் குழந்தையை கலைப்பதற்கு அனுமதி கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.ஜி.அருண் முன்பாக விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் நீதிபதி அருண் சில பார்வையை முன்வைத்தார்.


அதன்படி, “மருத்துவ கருகலைப்புச் சட்டம் (MTP Act) என்பது பெண்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில்தான் அமைக்கப்பட்டது. அதாவது பெண்கள் தங்களுடைய  குழந்தையை பெற்று எடுக்கலாமா வேண்டாமா என்பதை அவர்கள் முடிவு செய்வதற்காக தான் இது அமைக்கப்பட்டது. மேலும் அடிப்படை உரிமை பிரிவின் 21ன் படி அனைவருக்கும் சுதந்திரமாக வாழும் உரிமை உள்ளது. அந்த உரிமையின் கீழ் பெண்கள் தங்களுடைய உடல் தொடர்பான முடிவுகளை எடுக்கும் சுதந்திரமும் உள்ளது. அதற்கு அவர்கள் கணவர்களிடம் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை.






மேலும் அவர் விவாகரத்து பெற்றவர் என்பதால் கருகலைப்பு செய்யக் கூடாது என்று கூற முடியாது. விவாகரத்து என்பது ஒரு போதும் கருக்கலைப்புக்கு தடையாக இருக்காது. ஏனென்றால் குழந்தை பிறப்பு மற்றும் வளர்ப்பு தொடர்பாக பெண்களுக்கு அதிகமான உடல்  மற்றும் மனம் அழுத்தம் ஏற்படுகிறது” எனத் தெரிவித்தார். இந்த வழக்கில் தற்போது ஒரு இடைக்கால உத்தரவையும் பிறப்பித்தார். அதன்படி தற்போது அந்தப் பெண்ணின் கருகலைக்க அனுமதி வழங்கினார். 


அதை அவர் கோட்டயம் அரசு மருத்துவமனை அல்லது வேறு ஒரு அரசு மருத்துவமனையில் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அந்தப் பெண்ணின் கருகலைப்பிற்கு தேவையானவற்றை செய்யும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். அந்தக் குழந்தை ஒரு வேளை உயிருடன் இருக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தையை பார்த்து கொள்ள அப்பெண்ணால் இயல முடியவில்லை என்றால் அரசு அக்குழந்தை பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினார். 


முன்னதாக இந்தப் பெண் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார். அதன்பின்னர் அவர் கருவுற்றார் என்று தெரிந்தும் கணவரின் வீட்டில் இருந்து எந்தவித உதவியும் செய்யவில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக தன்னுடைய கருவை கலைத்துவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கடந்த 17ஆம் தேதி முதல் முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தப் பெண்ணை ஆய்வு செய்து மருத்துவர்கள் குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இப்பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரசவ காலம் வரை சென்றால் இந்தப் பெண்ணின் மனநிலை பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையை வைத்து தற்போது நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.