சமீப காலமாக தொலைபேசி அழைப்புகள் மூலம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து, பெரிய அளவிலான சைபர் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த ஒரு மூதாட்டிக் வந்த தொலைபேசி அழைப்பு மூலம், அவர் 20 கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டிக்கு வந்த மோசடி அழைப்பு - ரூ.20.25 கோடி அபேஸ்
மும்பையைச் சேர்ந்த 86 வயது மூதாட்டி ஒருவருக்கு, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26-ம் தேதி ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் போசியவர் தான் ஒரு போலீஸ்காரர் என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அந்த மூதாட்டியின் ஆதார் எண்ணை பயன்படுத்தி தொடங்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்கிலிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பண மோசடிகளும் நடைபெற்றுள்ளதாகவும், மூதாட்டி மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் மிரட்டியுள்ளனர்.
மேலும், அந்த வழக்கில், மூதாட்டி மட்டுமல்லாமல், அவரது மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறி பீதியை கிளப்பியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்த மூதாட்டியை டிஜிட்டல் அரெஸ்ட்டில் வைத்து, அந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றால், தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்புமாறு கேட்டுள்ளனர்.
இப்படியே மார்ச் மாதம் வரை அவ்வப்போது மிரட்டி, மூதாட்டியிடம் 20 கோடியே 25 லட்சம் வரை பணத்தை பறித்துள்ளனர். தொடர்ந்து, ஒரு கட்டத்தில் அது ஒரு மோசடி என்பதை உணர்ந்த மூதாட்டி, காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல் துறையினர், மோசடி பேர்வழிகள் அளித்த வங்கிக் கணக்குகளை வைத்து, அவர்களை தட்டித் தூக்கியுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சைபர் மோசடிகளில் சிக்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை
இச்சம்பவத்தைத் தொடர்ந்த, பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தெரியாத நபர்களிடம் ஆதார் எண்ணையோ, ஓடிபி, வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற தனிப்பட்ட தரவுகளையோ தர வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், ஆதார் எண்ணை கேட்டு போலீசாரோ, ஆதார் வழங்கும் துறையிலிருந்தோ தொலைபேசி அழைப்புகள் எதுவும் வராது என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் எவ்வளவு பணிவாகவும், நம்பும்படியாகவும் பேசினாலும், அத்தகைய அழைப்புகளை உடனடியாக துண்டித்து விடுமாறும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உங்கள் ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் இருந்தால், ஆதார் இணையதளத்திற்கு சென்று, ஓடிபி-ஐ வைத்து லாகின் செய்து, “Authentication History“ என்ற பகுதிக்கு சென்று, அதில் நீங்கள் சந்தேகப்படும்படியான பரிவர்த்தனைகள் ஏதேனும் நடந்துள்ளதாக என சரிபார்க்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீங்களும் உங்கள் பரிவர்தனைகளை சரி பாருங்கள்... அதன் மூலம், ஏமாற்றப்படுவதிலிருந்து நாம் தப்பலாம்.