Aadhaar Card Free Update Deadline: ஆதார் விவரங்களை பயனாளர்கள் கட்டணமின்றி அப்டேட் செய்வது எப்படி என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


ஆதார் அட்டை அப்டேட்:


மத்திய அரசு வழங்கும் தனிமனித அடையாள அட்டையான ஆதார், தற்போது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இன்றியமையாததாக மாறியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் கொண்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும், ஆதார் அடிப்படையிலேயே செயல்படுத்தப்படுகிறது. தனிநபரின் கருவிழி மற்றும் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு, அதன் விவரங்களுடன் வழங்கப்படும் ஆதார் அட்டையை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம், மோசடிகள் தவிர்க்கப்படும். போலி எண்களை யாராலும் பயனபடுத்த முடியாது. இந்நிலையில் தான், ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை திருத்துவதற்கான இலவச அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.



ஆதார் அப்டேட் - கட்டண விவரம்:


வழக்கமாக ஆதார் பயனாளர்கள் தங்களது சுயவிவரங்களை ஆதார் போர்டலில் டிஜிட்டல் முறையிலோ அல்லது ஆதார் மையங்களுக்கு நேரடியாக சென்றோ திருத்திக் கொள்ளலாம். அவ்வாறு செய்யப்படும் திருத்தங்களுக்கு பயனாளர்கள் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.


இலவசமாக விவரங்களை அப்டேட் செய்யும் வசதி:


இந்நிலையில் தான் myAadhaar போர்டலுக்கு சென்று சுயவிவரங்களில் கட்டணமின்றி திருத்தம் செய்வதற்கான அவகாசத்தை கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு வழங்கி வருகிறது. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று அந்த அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், கடைசி வாய்ப்பாக  வரும் டிசம்பர் 14ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.  அதேநேரம், ஆதார் மையங்களுக்கு நேரில் சென்று திருத்தம் மேற்கொண்டால் 50 ரூபாய் எனும் பழைய கட்டணம் வசூலிக்கும் முறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எப்போது திருத்தங்கள் தேவைப்படும்? 


தனிமனித விவரங்களில் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், பயனாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள மையங்களுக்குச் செல்லலாம் அல்லது டிஜிட்டல் வழிகளைத் தேர்வு செய்து திருத்தங்களை செய்யலாம்.  புதிய நகரில் குடிபெயர்வது போன்ற காரணங்களால் உங்களது முகவரி மாறி இருந்தாலும், ஆதார் அட்டையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளலாம். மேலும், கடந்த 10 ஆண்டுகளாகவே ஆதார் அட்டையில் உள்ள தகவல்களில் எந்த அப்டேட்டும் செய்யாதவர்களும் தங்களது, தனிநபர் தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும்.


மொபைல் வாயிலாக புதுப்பிப்பது எப்படி?



  • ஆதார் விவரங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்க, பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/ இல் உள்நுழையலாம்.

  • பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு  பகிரப்படும் OTP எண்ணை பயன்படுத்தி உள்ளே நுழையலாம்

  • தொடர்ந்து, ஆவண புதுப்பிப்பு' ஐகானைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • “ ஆதார் வைத்திருப்பவர் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும், சரியாகக் கண்டறியப்பட்டால், அடுத்த ஹைப்பர்-லிங்கைக் கிளிக் செய்யவும். அடுத்த திரையில், குடிமகன் கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து அடையாளச் சான்று (PoI) மற்றும் முகவரிச் சான்று (PoA) ஆவணங்களைத் தேர்வு செய்து, ஆவணங்களைப் புதுப்பிக்க அதன் நகல்களைப் பதிவேற்ற வேண்டும்.

  • புதுப்பிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய PoA மற்றும் PoI ஆவணங்களின் பட்டியல் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.


உங்கள் மின்னஞ்சலுக்கு 'சேவை கோரிக்கை எண் (SRN)' அனுப்பப்படும். SRN இலிருந்து உங்கள் ஆவண புதுப்பிப்பின் நிலையை நீங்கள் கண்காணிக்கலாம். ஆதார் அட்டை விநியோகம் செய்யப்பட்ட ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, பயனாளர்கள் தங்களது விவரங்களை அப்டேட் செய்ய வேண்டியது அவசியமாகும்.