டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு நேற்று முன் தினம் அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் அழைத்து விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.


இதனால் விமான நிலையம் முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. மேலும், விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. பல மணி நேரம் சோதனை செய்த பிறகு விமான நிலையத்தில் வெடிகுண்டு இல்லை என தெரிய வந்தது. தொலைபேசியில் வந்த அழைப்பு வெறும் புரளி என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த எண்ணுக்கு அதிகாரிகள் அழைக்க முயற்சி செய்தனர். பலமுறை டயல் செய்தும் அந்த நபர் தொலைபேசியை எடுக்கவில்லை.


தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் குஷாக்ரா அகர்வால் (வயது 20 ) என தெரிய வந்தது. பின் அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் வீட்டில் இல்லை என்பது தெரிய வந்தது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல் துறையினர், ஜானக்புரி பகுதியில் அவர் இருப்பதை உறுதி செய்தனர். அந்த இடத்திற்கு சென்று அந்த நபரை கைது செய்தனர்.


அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் 12 ஆம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும், பிரபலமடைய வேண்டும் என்பதற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். மேற்கொண்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அவர் குருகிராம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


கடந்த மாதம் இதேபோல், 38 வயதுடைய ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். பின் அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது அவர் மது போதையில் இருந்தாக தெரிவிக்கப்பட்டது. பிகார் மாநிலம், சம்பரன் பகுதியை சேர்ந்த கிருஷ்னோ மாஹ்தோ என்பவர் தான் இந்த செயலில் ஈடுபட்டதாக காவல் துறையினர் கூறினர். 38 வயதான கிருஷ்னோ 5 ஆம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும், அப்பகுதியில் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணையின் போது வாக்குமூலம் கொடுத்துள்ளார்.