மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. இந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்தது. இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. இதில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.103.92ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 33 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.99.92 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த பத்து தினங்களில் 7 தினங்கள் 30 மற்றும் 31 பைசாக்கள் உயர்த்தப்பட்டு பெட்ரோல் விலை 100ல் இருந்து 103 ரூபாயை அடைந்துள்ளது. நாளை டீசல் விலையும் செஞ்சுரி அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இப்படி, எரிபொருள் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான உயர்வை சந்தித்து வருவதற்கு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால் உ.பி.யை சேர்ந்த அமைச்சர் ஒருவர் இப்பிரச்சினையில் மத்திய அரசை பாதுகாக்கும் விதமாக இதனால் யாருக்கும் பாதிப்பில்லை என்று பேசியுள்ளார். உத்தரபிரதேச அமைச்சர் உபேந்திர திவாரி இதுகுறித்து ஊடகங்களிடம் கூறியுள்ளதாவது: ''நாட்டின் எரிபொருள் விலைகளுடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமானம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒரு சிலர் மட்டுமே 4 சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்குத்தான் பெட்ரோல் தேவை. மற்றபடி 95 சதவிகித மக்களுக்கு பெட்ரோல் அத்தியாவசியத் தேவையில்லை'' என்று உபேந்திர திவாரி தெரிவித்தார்.



முன்னதாக புதன்கிழமை, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எரிபொருள் விலை உயர்வுக்கு பதிலளித்துப் பேசும்போது, "பெட்ரோலிய விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது, இந்தியாவுக்கு மட்டுமல்ல, இது ஒரு சர்வதேச பிரச்சினை'' என்று தெரிவித்தார். அதே போல அசாம் பாஜக தலைவர் பாபேஷ் கலிதா பெட்ரோல் விலை 200 ரூபாயை தாண்டினால் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்ல அனுமதி வழங்கும் ஒன்றிய அரசு என்று கருத்து தெரிவித்திருந்தார். பெட்ரோல் விலை நாளுக்குநாள் ஏறிக்கொண்டே செல்ல அதிலிருந்து மக்களை காக்க வேண்டியவர்கள் இது போன்று எதையாவது உளறிக்கொண்டிருப்பது மக்களை வேதனை அடையதான் செய்கிறது.