இதுவரை கண்டிராத வேகத்தில் ஒமிக்ரான் பரவி வருவதாகவும் இதுவரை உலக அளவில் 77 நாடுகளில் பரவியுள்ளது எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், “77 நாடுகளில் இப்போது ஒமிக்ரான் பதிவாகியுள்ளன. உண்மை என்னவென்றால், ஒமிக்ரான் இன்னும் கண்டறியப்படாவிட்டாலும் கூட, பெரும்பாலான நாடுகளில் இருக்கலாம். ஓமிக்ரான் முந்தைய மாறுபாடுகளுடன் நாம் இதுவரை காணாத வேகத்தில் பரவுகிறது. மக்கள் ஓமிக்ரானை லேசானது என்று நிராகரிக்கின்றனர். இது எங்களுக்கு கவலையை தருகிறது. நிச்சயமாக, இந்த வைரஸை குறைத்து மதிப்பிடுகிறோம் என்பதை நாங்கள் இப்போது கற்றுக்கொண்டோம்.
தற்போது கடுமையான பாதிப்பு குறைந்த பேருக்கு இருந்தாலும் பின்பு அதிகரிக்கக்கூடும். நான் மிகவும் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். தடுப்பூசிகளால் மட்டும் எந்த நாட்டையும் இந்த நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முடியாது. தற்போது எடுக்கும் நடவடிக்கைகள் மூலமே ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த முடியும். மாஸ்க்குக்கு பதிலாகவோ, சமூக இடைவெளிக்கு பதிலாகவோ தடுப்பூசிகள் இல்லை. அனைத்தும் முக்கியம். அனைத்தையும் மக்கள் நன்றாக கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து நாடுகளிலும் மிகவும் ஆபத்தில் உள்ளவர்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் போது தடுப்பூசிகள் ஒரு கருவியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடந்த 10 வாரங்களில் அதிக கோவாக்ஸின் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை விரைவில் பயன்படுத்துகின்றன. ஒரு சில நாடுகள் தடுப்பூசிகளை பயன்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்கின்றன. உலக சுகாதாரா நிறுவன ஊழியர்கள் தடைகளை சமாளிக்க அந்த நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர். ஒமிக்ரான் தொற்று சில நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் என்பதற்கான எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை. இதுபோன்ற திட்டங்கள் கொரோனா தடுப்பூசி பதுக்கலுக்கு வழி வகுக்கும். சமத்துவமின்மையை உண்டு பண்ணும்.
நாம் சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டு வந்தால் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரலாம். ஆனால் சமத்துவமின்மையை தொடர அனுமதித்தால், தொற்றுநோயையும் தொடர அனுமதிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' எனும் புதிய வகை கொரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில், வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தற்போது ஜனவரி மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.