குஜராத், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில், இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வெற்றி வாகை சூடி, பாஜகவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 5 தொகுதிகளின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

Continues below advertisement

வாக்கு எண்ணிக்கை

குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கடந்த 19-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னதாக, 17-ம் தேதி தேர்தல் பரப்புரை முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், அந்த 5 தொகுதிகளுக்காக சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை, இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

குஜராத்தின் 2 தொகுதிகளில் வெற்றி யாருக்கு.?

குஜராத்தில் உள்ள கடி மற்றும் விசாவதர் தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.

கடி தொகுதியில் 71.11 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டதில், கடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜேந்திரகுமார் தனேஷ்வர் வெற்றி பெற்றுள்ளார். இவர் 99,742 வாக்குகள் பெற்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ்பாய் சவ்தாவைவிட 39,452 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

மற்றொரு தொகுதியான விசாவதரில், ஆம் ஆத்மி வேட்பாளர் கோபால் இத்தாலியா வெற்றி பெற்றுள்ளார். இவர், 75,942 வாக்குகள் பெற்ற நிலையில், பாஜகவின் கிரித் படேல் 58,388 வாக்குகளை பெற்றார். இதன் மூலம், ஆம் ஆத்மி வேட்பாளர் 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.

கேரளா நிலம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

இதேபோல், கேரளாவின் நிலம்பூர் தொகுதியில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யாதன் ஷௌகத் 77,737 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அவரிடம், சிபிஐ-எம் வேட்பாளர் எம். சுவராஜ் சுமார் 11,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இவர் பெற்ற வாக்குகள் 66,660.

பஞ்சாப் லூதியானா மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி

இந்நிலையில், பஞ்சாப்பில் உள்ள லூதியானா மேற்கு தொகுதியின் நடந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 35,179 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் வேட்பாளர் பரத் பூஷன் ஆஷு 24,542 வாக்குகளை பெற்ற நிலையில், 10,637 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மேற்குவங்கம் காலிகஞ்ச் தொகுதி நிலவரம்

இதேபோல், மேற்கு வங்கத்தில் உள்ள காலிகஞ்ச் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அலிஃபா அகமது 1,02,049 வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக, பாஜக-வின் ஆஷிஷ் கோஷ் 52,710 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். இதன் மூலம், டிஎம்சி வேட்பாளர் அலிஃபா 50,049 வாக்குகள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றுள்ளார்.

பாஜகவிற்கு ஷாக் கொடுத்த ஆம் ஆத்மி

இடைத்தேர்தல் நடைபெற்ற மொத்தம் 5 தொகுதிகளில், 2 தொகுதிகளை கைப்பற்றி, பாஜகவிற்கு ஷாக் கொடுத்துள்ளது ஆம் ஆத்மி. குறிப்பாக, பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில், இரண்டு இடங்களில் ஒரு இடத்தை பிடித்து அசத்தியுள்ளது ஆம் ஆத்மி. அக்கட்சியின் தலைவர்கள் மீது வழக்குகளை போட்டு, தண்டனை வாங்கிக் கொடுத்தது பாஜக அரசு. ஆனாலும், தேர்தலில் அது வேறு விதமாக பிரதிபலித்துள்ளது. ஆம் ஆத்மியின் செல்வாக்கு குறையாமல், கூடியிருக்கிறதோ என்று எண்ணும் அளவிற்கு இந்த வெற்றி அமைந்தள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதன் மூலம் பாடம் கற்று, மற்ற கட்சியினர் மீது வழக்குகள் போடுவதை விட்டுவிட்டு, பாஜக வேறு விதமான அரசியலை கையிலெடுக்க வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.