Manipur Issue: புத்தாண்டின் முதல் நாளிலேயே மணிப்பூரில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், முதலமைச்சர் பிரைன் சிங் அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
4 பேர் சுட்டுக் கொலை:
புத்தாண்டு தினத்தன்று மணிப்பூரில் நடந்த புதிய வன்முறையில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டடுள்ளனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசிய உள்ளூர் மக்கள், ”வாகனங்களில் வந்த அந்த குழுவினர் தங்களுக்கு தெரிந்த நபருடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் அந்த நபர்கள் திடீரென சுடதொடங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் தாக்குதல் நடத்திய நபர்களின் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். இன்னும் அடையாளம் காணப்படாத அந்த குழு, மிரட்டி பணம் பறிப்பதற்காக தானியங்கி ஆயுதங்களுடன் வந்ததாக தௌபல் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் சிலர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள தௌபால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, கக்சிங் மற்றும் பிஷ்னுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது
முதலமைச்சர் வேண்டுகோள்:
வன்முறைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுமென வலியுறுத்தி முதலமைச்சர் பிரைன் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளை பிடிக்க காவலர்களை குவித்துள்ளோம். குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசுக்கு உதவுமாறு லிலாங்கில் (சம்பவம் நடந்த இடத்தில்) வசிப்பவர்களிடம் கைகளை கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன். சட்டத்தின் கீழ் நீதி வழங்க அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று உறுதியளிக்கிறேன்” என பிரைன் சிங் தெரிவித்துள்ளார். இதனிடையே, அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் உடனான அவசர கூட்டத்தையும் நடத்தினார்.
தொடரும் மணிப்பூர் கலவரம்:
மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே கடந்த மே மாதம் 3ம் தேதி வன்முறை வெடித்தது. இதையடுத்து அங்கு நடந்த வன்முறைச் சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையே அதிரச் செய்தது. குற்ப்பாக இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்று கூட்டுபாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளானது. அடுத்தடுத்து நடந்த வன்முறை மற்று களவரங்களால், மாநிலத்தில் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது. ஏராளமானோர் பாதுகாப்பின்றி சொந்த மாநிலத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தனர். காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து சிலர் ஆயுதங்களை திருடிச் சென்று, எதிர்தரப்பினர் மீது தாக்குதல் நடத்தினர். இதுபோன்ற சம்பவங்களால் 180 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க கிட்டத்தட்ட 60,000 பேர் வீடற்றவர்களாக மாறியுள்ளனர்.