Delhi Bus Accident: டெல்லியில் நிலவும் கடும் மூடுபனியால் அடுத்தடுத்து இரண்டிற்கும் மேற்பட்ட பேருந்துகள் மோதி சாலையிலேயே பற்றி எரிந்துள்ளன.
பேருந்துகள் மோதி விபத்து - 4 பேர் பலி
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்து பொதுமக்கள் சுவாசிக்கவே சிரமப்பட்டு வருகின்றனர். அதோடு சேர்ந்து கடுமையான பனிப்பொழிவும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைய கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் இரண்டுக்கும் மேற்பட்ட பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக்கொண்டு தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
ஆக்ரா-நொய்டா எக்ஸ்பிரஸ்வே பாதையில் உள்ள மைல்ஸ்டோன் 127 இல் இந்த விபத்து நடந்ததாக மதுரா காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நிலவும் கடுமையான மூடுபனி காரணமாக, முகப்பு விளக்குகள் எரியவிட்டபடி சென்றாலுமே எதிரே அல்லது முன்னே செல்லும் வாகனங்களை அடையாளம் காண முடியாத சூழல் நிலவுகிறது. அந்த வகையில் தான் விரைவுச் சாலையில் முதலில் மூன்று கார்கள் மோதிக்கொண்டன, அதன் பிறகு ஏழு பேருந்துகள் அடுத்தடுத்து ஒன்றன் மீது ஒன்றாக மோதியுள்ளன. இதில் ஒன்று சாலைப் பேருந்து, மற்ற ஆறும் ஸ்லீப்பர் பேருந்துகள் ஆகும். விபத்துக்குள்ளான அனைத்து பேருந்துகளும் அடுத்த சில நிமிடங்களிலேயே தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளன.
மீட்பு பணிகள் தீவிரம்:
தகவலறிந்து 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதோடு, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து அப்பகுதியில் நிலவிய அடர்ந்த புகை மூட்டம் காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உத்தரபிரதேசம் முழுவதும் பல நகரங்களில் திங்கள்கிழமை காலை காற்றின் தரம் மோசமடைந்ததால் தெரிவுநிலை குறைந்ததால், அடர்த்தியான புகை மூட்டம் நிலவியது.
முதலமைச்சர் இரங்கல்:
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
228 விமானங்கள் ரத்து
ஆக்ராவில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக தாஜ்மஹால் கண்களுக்கு புலப்படாதபடி உள்ளது. மூடுபனி மிகவும் அடர்த்தியாக இருந்ததால், சாலைகளில் வாகனங்கள் கூடப் பார்ப்பது கடினமாக இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். டெல்லியில் பனி அடர்ந்த சூழலால், தெளிவற்ற வானிலை ஏற்பட்டு டெல்லி விமான நிலையத்தில், 131 விமானங்களின் புறப்பாடு மற்றும் 97 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.