நாடு முழுவதிலும், வாகன ஓட்டிகளின் வசதியை கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது மத்திய அரசு. அந்த வகையில், போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் மீண்டும் ஒரு பெரிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இந்த புதிய வசூல் முறை குறித்து தற்போது பார்க்கலாம்.
சுங்கச்சாவடி கட்டண முறைகளில் தொடர் மாற்றம்
ஒரு காலகட்டத்தில், தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளில் பயணிக்க, அங்குள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களை கவுண்ட்டர்களில் நிறுத்தி, பணம் செலுத்தி ரசீது பெற்று செல்ல வேண்டும். அந்த முறை இருந்தபோது, சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை இருந்தது.
இதையடுத்து, வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைப்பதற்காக போக்குவரத்துத் துறை அமைச்சகம், ஃபாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறையில், சுங்கச்சாவடி கவுண்ட்டரில், வாகனத்தில் உள்ள ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு, கட்டண பிடித்தம் மேற்கொள்ளப்பட்டு வரகிறது. இதனால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து பாதிப்பு சற்றே குறைந்தது. ஆனாலும், வாகனங்கள் கவுண்ட்டரில் ஸ்கேனுக்காக நிற்க வேண்டும்.
தற்போது, வாகன ஓட்டிகளுக்கு அந்த சிரமத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்ற நோக்கில், புதிய, பெரிய மாற்றம் ஒன்றை கொண்டுவருகிறது போக்குவரத்துத் துறை அமைச்சம். அந்த புதிய முறை குறித்து பார்ப்போம்.
‘Multi Lane Free Flow‘ சிஸ்டம்
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் அடுத்த கட்டமாக, நாட்டில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில், Multi Lane Free Flow(MLFF) எனப்படும் தடையற்ற கட்டண வசூல் முறையை அறிமுகப்படுத்துகிறது சாலை போக்குவரத்துத் துறை.
இந்த புதிய முறை, சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமலேயே கட்டணம் வசூலிக்கும் ஒரு நவீன முறையாகும். இதற்காக, சுங்கச்சாவடிகளில் உயர் செயல்திறன் கொண்ட RFID ரீடர்கள் மற்றும் ANPR கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
இதன் மூலம், வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் செல்லும்போது, ஃபாஸ்டேக் மற்றும் வாகன எண்ணை ஸ்கேன் செய்து, தானாகவே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். தற்போது உள்ள ஸ்கேனர்களில், வாகனங்களை நிறுத்தியே ஸ்கேன் செய்ய முடியும். ஆனால், புதிய நவீன முறையில், வாகனம் ஓரளவு மெதுவாக சென்றாலே போதும், கட்டணம் தானாக பிடித்தம் செய்யப்படும்.
எங்கெங்கு கொண்டுவரப்படும்.?
இந்த புதிய முறை, முதற்கட்டமாக குஜராத்தில் உள்ள NH 48-ல் சோரியாசி டோல் பிளாசாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஹரியானாவில உள்ள NH 44-ல் கரௌண்டா டோல் பிளாசாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் இந்த முறையை கொண்டுவர போக்குவரத்து அமைச்சம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விரைவான, திறமையான தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க்கை உருவாக்க முடியும் என்றும், சுங்க வருவாயையும் மேம்படுத்த முடியும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.