கர்நாடகாவில் கடந்த 10 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டு, 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 


கர்நாடக தேர்தல்:


இருப்பினும், அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சரான சித்தராமையாவுக்கும், கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். 


இதனையடுத்து மே 20ஆம் தேதி பதவியேற்பு விழா நடந்தது. 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதன்படி, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.


இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். பெங்களூருவில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில்  இன்று காலை 11.45 மணிக்கு புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது.  


24 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியல்:


எச்.கே.பாட்டீல், கிருஷ்ணபைரே கவுடா, என்.செலுவராயசாமி, கே.வெங்கடேஷ், எச்.சி.மகாதேவப்பா, ஈஷ்வர் கண்ட்ரே, கியாத்தசந்திர என்.ராஜண்ணா, தினேஷ் குண்டுராவ், சரணபசப்பா தர்சனாபூர், சிவானந்தா பாட்டீல், திம்மாப்பூர் ராமப்பா பாலப்பா, எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன், தங்கடகி சிவராஜ் சங்கப்பா ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.


மேலும், சரணபிரகாஷ் ருத்ரப்பா பாட்டீல், மான்கால் வைத்யா, லட்சுமி ஆர்.ஹெப்பால்கள், ரகீம் கான், டி.சுதாகர், சந்தேஷ் எஸ்.லாட், என்.எஸ்.போஸ்ராஜூ, பி.எஸ்.சுரேஷ், மது பங்காரப்பா, எம்.சி.சுதாகர், பி.நாகேந்திரா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மேற்கண்ட 24 பேருக்கும் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 


பல்வேறு சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம்:


பல்வேறு சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 34 பேர் கொண்ட அமைச்சரவையில், வொக்கலிகா சமூகத்தை சேர்ந்த ஆறு பேர் உள்ளனர். லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எட்டு பேருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஆறு பேருக்கும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஆறு பேருக்கும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த மூன்று பேருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.


இரண்டு இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவம், பிராமண, சமண சமூகத்தே சேர்ந்த தலா ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 
இந்த அமைச்சரவையில், 9 பேர், முதல்முறையாக அமைச்சராகியுள்ளனர். ஆனால், ஒரு பெண்ணுக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.