சர்வதேச யோகா தினம் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. பிரதமர் மோடி ஐ.நா. சபையில் 180 நாடுகளின் பிரதிநிதி முன்னிலையில் பேசிய நிலையில், இந்தியாவிலும் மத்திய அரசு சார்பில் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


ஓடும் ரயில் மீது யோகா:


இந்த நிலையில், ஓடும் ரயில் மீது இளைஞர்கள் இருவர் யோகா செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது நொய்டா. அந்த பகுதியில் பயின்று வரும் இரண்டு கல்லூரி மாணவர்கள் யோகா தினத்தை முன்னிட்டு ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணினர். இதையடுத்து, அவர்கள் ரயில் மீது யோகா செய்ய திட்டமிட்டுள்ளனர்.


இதையடுத்து, நொய்டா சுற்றுவட்டார பகுதியில் உள்ள சரக்கு ரயில் ஒன்றின் மீது இளைஞர்கள் இருவரும் ஏறியுள்ளனர். சரக்கு ரயில் மீது உடலை காட்டிக் கொண்டு அரைநிர்வாணமாக நின்ற இளைஞர்கள் இருவரும் இரண்டு பெட்டிகள் இணையும் பகுதியில் நின்று கொண்டு ஒரு பெட்டியில் ஒரு காலையும், மற்றொரு பெட்டியில் இன்னொரு காலையும் வைத்துக்கொண்டு யோகா செய்துள்ளனர்.






கைது செய்த போலீஸ்:


ஆற்றுப்பகுதியின் மேலே அமைந்துள்ள தண்டவாளத்தின் மீது சரக்கு ரயில்  மெல்ல நகர்ந்து செல்லும்போது அவர்கள் யோகா செய்யும் வீடியோ இணையத்தில் வெளியானது. இதைக்கண்டு பொதுமக்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ரயில்வே போலீசார் இணையத்தில் வைரலான வீடியோவை வைத்து சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


போலீசார் விசாரணையில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 2 பேரும் கல்லூரி மாணவர்கள் என்றும், நொய்டாவில் உள்ள ஜார்சாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஓடும் ரயில் மீது யோகா செய்தால் பிரபலம் ஆகிவிடலாம் என்பதற்காக அவர்கள் இதை செய்தததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபலமாக ஆசைப்பட்டு கைதிகளான மாணவர்கள் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Crime: வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய், மகள் கொடூர கொலை - திண்டுக்கல் அருகே பயங்கரம்


மேலும் படிக்க: Crime: பட்டப்பகல்.. நட்ட நடு வீதி.. ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் மாணவர்கள் - நடந்தது எப்படி?