மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த வங்கி தலைமை நிர்வாகத் தரப்பு அறிவித்துள்ளது. அந்த வங்கியின் பல்வேறு ஊழியர் சங்கங்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், அதன் வங்கிச் சேவைகள் ஒரு அளவிற்கு பாதிக்கப்படலாம் என்று நாட்டின் முன்னணி கடன் வழங்கும் நிறுவனமான எஸ்பிஐ கூறியுள்ளது.


"வேலைநிறுத்த நாட்களில் எங்கள் கிளைகள் மற்றும் அலுவலகங்களில் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகளை வங்கி மேற்கொண்டுள்ள நிலையில், வேலைநிறுத்தத்தால் எங்கள் வங்கியின் பணிகள் குறைந்த அளவில் பாதிக்கப்படலாம்" என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்த அந்த வங்கியின் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.


அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA), இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA) ஆகியவை தங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த முடிவு குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக இந்திய வங்கிகள் சங்கம் (IBA) தகவல் தெரிவித்துள்ளதாக எஸ்பிஐ கூறியுள்ளது. 


வேலைநிறுத்தத்தால் ஏற்படக்கூடிய இழப்பை கணக்கிட முடியாது என்றும் வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் 28-29 ஆகிய தேதிகளில் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
 


பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கை மற்றும் வங்கிச் சட்ட திருத்த மசோதா 2021 ஆகியவற்றை எதிர்த்து இந்த நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஐக்கிய வங்கி சங்கங்களின் (UFBU) கீழ் உள்ள வங்கி தொழிற்சங்கங்கள், பொதுத்துறை வங்கிகளை (PSBs) தனியார்மயமாக்குவதற்கு எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்தன.

முன்னதாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ மீண்டும் நிலையான வைப்பு வட்டி விகிதத்தை (எஸ்பிஐ எஃப்டி) அண்மையில் உயர்த்தியுள்ளது. முன்னதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஷார்ட் டெர்ம் FDகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது. தற்போது மீண்டும் ஒரு வாரத்திற்குள் SBI இந்த இரண்டாவது பெரிய உயர்வைச் செய்துள்ளது. ஸ்டேட் வங்கியின் கூற்றுப்படி, இந்த முறை 10 வருட கால FDகளுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஸ்டேட் வங்கி நீண்ட காலத்திற்குப் பிறகு FD விகிதத்தை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐயின் அதிகரித்த (SBI FD Rate) வட்டி விகிதங்கள் ஜனவரி 22 முதல் பொருந்தும். ஸ்டேட் வங்கியின் (State Bank of India) கூற்றுப்படி, எஃப்டிகளுக்கான வட்டி விகிதங்கள் 7 நாட்களில் இருந்து 10 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.