விவசாயிகளுக்கான திட்டங்கள்
விவசாயம் வளர்ந்தால் தான் அந்த நாட்டின் வளர்ச்சியும் முன்னேறும். எனவே விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் அரசுகள் பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பேரிடர் காலத்தில் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு, மானிய உதவித்திட்டம், கடன் உதவி திட்டம் என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்று தான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு 6ஆயிரம் உதவித்தொகை
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 9 கோடி முதல் 10 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் என நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக நிதி உதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2ஆயிரம் ரூபாய் வரவுவைக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்த தொகை எப்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 22வது தவணை தொகை மார்ச் 13 ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 13ஆம் தேதி உதவித்தொகை
இந்தத் தகவல், சமூக ஊடகத் தளமான X இல் உள்ள PM Kisan இன் அதிகாரப்பூர்வ கணக்கு மூலம் அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை திட்டமிடப்பட்ட தேதியில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என அந்தப் பதிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாத இறுதிக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வரும் என தகவல் பரவியது. அடுத்தாக விவசாயிகளுக்கு ஹோலி பண்டிகைக்கு முன் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை மறுதினம் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயனாளி பட்டியலில் பெயரை எப்படிப் பார்ப்பது.?
விவசாயிகள் அதிகாரப்பூர்வ PM கிசான் வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். அங்கு, "உங்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள்" என்று பெயரிடப்பட்ட இடத்தை கிளிக் செய்யவும், தங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு திரையில் காட்டப்படும் கேப்ட்சா குறியீட்டை பதிவிட வேண்டும். பின்னர் அந்த விவசாயின் மொபைல் தொலைபேசிக்கு ஒரு OTP அனுப்பப்படும். OTP ஐ உள்ளிட்டதும், முழுமையான கணக்குத் தகவல் திரையில் தோன்றும்.
