சமீப காலமாகவே, குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நாட்டின் தலைநகர் டெல்லியில் நடக்கும் குற்றசெயல்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக, டெல்லி கல்லூரிக்கு வெளியே நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கல்லூரிக்கு வெளியே கத்திக்குத்து:


டெல்லியில் கல்லூரிக்கு வெளியே இன்று மாணவர்கள் சிலர் குத்தியதில், இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர், 19 வயதான நிகில் சவுகான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆர்யபட்டா கல்லூரியில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓபன் லேர்னிங்கில் பிஏ (ஹான்ஸ்) அரசியல் அறிவியல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.


இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மதியம் 12:30 மணியளவில் கல்லூரி வாயிலுக்கு வெளியே நிகிலை நான்கு மாணவர்கள் கொண்ட கும்பல் தாக்கியது. அவர் மார்பில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார். 


ஏழு நாட்களுக்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கல்லூரியில் நிகிலின் காதலியிடம் தவறாக நடந்து கொண்டார். இன்று, முக்கிய குற்றவாளி, தன்னுடைய மூன்று நண்பர்களுடன் கல்லூரி வாயிலுக்கு வெளியே நிகிலிடம் சண்டையிட்டு கத்தியால் குத்தினார். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள், பாதிக்கப்பட்ட மாணவன் படித்து வரும் அதே கல்லூரியைச் சேர்ந்தவர்கள். அனைவரும் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார். குற்றம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ரத்தக் கறை தரையில் தெறித்திருப்பதைக் காணலாம். அந்த பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.


தொடர்ந்து அதிகரிக்கும் குற்றச் செயல்கள்:


கடந்தாண்டு தேசிய தலைநகர் டெல்லியில் தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நாட்டின் பாதுகாப்பற்ற பெருநகரமாக டெல்லி திகழ்வதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 13,892 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 40% அதிகமாகும். அந்த ஆண்டு, 9,782 வழக்குகள் பதிவாகியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் 19 பெருநகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் 32.20 சதவீதம் ஆகும். 


டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.


கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது.