Saudi Bus Crash: சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலி:
சவுதி அரேபியாவின் மெதினா அருகே நடந்த பேருந்து விபத்தில், 42 இந்தியர்கள் உயிரிழந்தனர். அதில் 9 குழந்தைகள் உட்பட 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் சனிக்கிழமை அன்று சொந்த ஊருக்கு திரும்ப திட்டமிட்டிருந்ததாம்.
இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த முகமது ஆசிப் பேசுகையில், “எனது மைத்துனி, மைத்துனர், அவர்களின் மகன், மூன்று மகள்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் இந்த பயணத்தை மேற்கொண்டனர். அவர்கள் எட்டு நாட்களுக்கு முன்பு புறப்பட்டனர். உம்ரா முடிந்து, மதீனாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அதிகாலை 1.30 மணியளவில், விபத்து ஏற்பட்டது, பேருந்து தீயில் எரிந்து நாசமானது” என்று தெரிவித்துள்ளார்.
மரண ஓலம்
உயிரிழந்தவர்கள் நசீருதீன் (70), அவரது மனைவி அக்தர் பேகம் (62), மகன் சலாவுதீன் (42), மகள்கள் அமினா (44), ரிஸ்வானா (38), மற்றும் ஷபானா (40) மற்றும் அவர்களது குழந்தைகள் என்று முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். ராம்நகரில் உள்ள நசீருதீன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வீட்டிற்கு சென்ற அவரது சகோதரி, "என் சகோதரனின் முழு குடும்பமும் அழிந்துவிட்டது என்று கதறி அழுத வீடியோ அங்கிருந்தவர்களை மனமுடைய செய்தது.
கோர விபத்து நடந்தது எப்படி?
சாலை விபத்தில் கொல்லப்பட்ட 42 பேரில் பெரும்பாலானோர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பயணித்த பேருந்து மதீனாவிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் டீசல் டேங்கர் லாரியுடன் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நள்ளிரவு பயணத்தில் பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. எனவே, விபத்துக்குப் பிறகு வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை.
உடல்களை மீட்க நடவடிக்கை:
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சவுதி அரேபியாவின் மதீனா அருகே இந்திய உம்ரா யாத்ரீகர்கள் சம்பந்தப்பட்ட ஒரு துயரமான பேருந்து விபத்தைக் கருத்தில் கொண்டு, ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உதவி எண்ணின் தொடர்பு விவரங்கள் பின்வருமாறு: கட்டணமில்லா எண் - 8002440003” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் உடலை தாயகம் கொண்டு வந்து, குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து உள்ளதாகவும், வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.