இன்று டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், யோகா துறையில் தன்னுடைய நீண்ட கால பங்களிப்புக்காக 125 வயதான யோகா பயிற்சியாளர் சுவாமி சிவானந்தா பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக் கொண்டார். இந்தியாவின் வரலாற்றிலேயே மிக அதிக வயதில் பத்ம விருது பெற்றவராகவும் சுவாமி சிவானந்தா கருதப்படுவதோடு, தன்னைச் சுற்றி இருப்பவர்களால் `யோகா சேவக்’ என அழைக்கப்படுகிறார். இவர் காசியின் கரையோரங்களில் உள்ள வழிபாட்டுப் பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளாக யோகா பயிற்சியில் ஈடுபட்டும், அளித்தும் வருவதாகக் கூறப்படுகிறது.
செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தனது விருதைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கும் காட்சிகள் பதிவிடப்பட்டுள்ளன.
பத்மஸ்ரீ விருதுகள் பட்டியலில், கட்ச் வெள்ளப் பாதிப்பின் போது பாதிக்கப்பட்டவர்களுக்காக `ஆடை வங்கி’ ஒன்றைத் தொடங்கிய 91 வயது மூதாட்டி ஒருவர், போலியோவுக்கு எதிராகப் போராடி வரும் 82 வயதான எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், காஷ்மீரின் பந்திபோரா பகுதியைச் சேர்ந்த 33 வயதான தற்காப்புக் கலைஞர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று, விருதுகள் வழங்கப்பட்டன.
நாடு முழுவதும் சமூகப் பணி, பொது விவகாரங்கள், கலை, அறிவியல், தொழில்நுட்பம், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, பொதுச் சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. `பத்ம விபூஷண்’, `பத்ம பூஷண்’, `பத்மஸ்ரீ’ ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் போதும் அறிவிக்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் அதிகாரப்பூர்வ விழாக்களில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு மொத்தமாக 128 பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இவற்றுள் 4 பத்ம விபூஷண் விருதுகள், 17 பத்ம பூஷன் விருதுகள், 107 பத்மஸ்ரீ விருதுகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. விருது பெறுபவர்களுள் 34 பேர் பெண்கள் ஆவர். திருநங்கை ஒருவரும் பத்ம விருதுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். மேலும், இறப்பிற்குப் பிறகு விருதுகள் வழங்கப்படுவோர் 13 பேர் எனவும் கூறப்பட்டுள்ளது.