ஒடிஷாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.கஞ்சம் மாவட்டம் திகபஹண்டியில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்ததுடன் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பேருந்தும்,  அரசுப் பேருந்தும் விபத்துக்குள்ளானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


பெர்ஹாம்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் ஒரு மினி பேருந்தில் சென்றுள்ளனர். அவர்கள் திருமணத்தை முடித்து விட்டு திகபஹண்டி அருகே உள்ள கந்ததேயுலிக்கு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 


இதில் தனியார் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 12 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பேராம்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


ஒடிசாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த ரயில் விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த செய்திகளின் தாக்கம் மறைவதற்கு முன்பாக தற்போது நடந்துள்ள இந்த பேருந்து விபத்து அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 


முன்னதாக கடந்த வாரம் கடலூர் மாவட்ட மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பண்ருட்டி நோக்கி சென்ற தனியார் பேருந்தும் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்தும் பட்டாம்பாக்கம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.


இரண்டு தனியார் பேருந்துகளிலும் பயணம் மேற்கொண்ட 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்தனர்.


விபத்து குறித்தும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரண்டு தனியார் பேருந்துகளும் அதிவேகத்தில் சென்றது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பார்வையிட்டு சந்தித்து ஆறுதல் கூறினார்.