Organ Donation: குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்து 100 மணி நேரத்தில் மூளைச்சாவு அடைந்த ஆண் குழந்தையின் உடல் உறுப்புகளை, பெற்றோர் தானம் செய்துள்ளனர்.
100 மணி நேரத்தில் இறந்த குழந்தை:
பிறந்த 100 மணி நேரத்தில் மூளைச் சாவு அடைந்த குழந்தை, உடலுறுப்பு தானம் செய்து 4 இளம் உயிர்களுக்கு புது நம்பிக்கையை அளித்த சம்பவம் கேட்போரை நெகிழ்ச்சியுடன் கண்கலங்க செய்துள்ளது. சூரத்தைச் சேர்ந்த அனுப் மற்றும் வந்தனா தாக்கூர் தம்பதியின் முந்தைய குழந்தை இறந்து பிறந்த நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்த நான்கு நாட்களில் மரணித்தது. இந்த மோசமான சூழலுக்கு மத்தியிலும் தனது மகனின் உடலுறுப்புகளை தானமாக வழங்கி, 4 இளம் பிஞ்சுகளின் வாழ்விற்கு புத்துயிர் அளித்துள்ளனர்.
மூளைச்சாவு அடைந்த குழந்தை:
வைரம் பிரிவின் திட்டமிடல் பிரிவில் பணிபுரிபவர் அனுப் தாக்கூர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி வந்தனாவை பிரசவத்திற்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து, மருத்துவமனையில் வந்தனாவை பரிசோதித்த மருத்துவர்கள், சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் அறுவை சிகிச்சை செய்யப்பட, வந்தனா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால், மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு சாதாரண இதயத் துடிப்பில் 15% மட்டுமே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் முறையாக சுவாசிக்கவில்லை, அழவில்லை மற்றும் உடலில் எந்த அசைவும் காணப்படவில்லை. தொடர்ந்து 48 மணிநேர கண்காணிப்புக்குப் பிறகு, குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
உடலுறுப்பு தானம்:
ஏற்கனவே தங்களது முதல் குழந்தை இறந்து பிறந்த நிலையில், இரண்டாவது குழந்தையும் பிறந்த சில மணி நேரங்களில் உயிரிழந்தது அனுப் மற்றும் வந்தனா தாக்கூர் தம்பதிக்கு பேரிடியாக அமைந்தது. அதேநேரம், சமீபத்திய குழந்தை உறுப்பு தானம் தொடர்பான சம்பவங்களை அறிந்த அந்த தம்பதி, தங்களது குழந்தையின் பிறப்பை என்றும் கொண்டாடும் விதமாக, இறந்த சிசுவின் உடலுறப்புகளை தானம் செய்ய ஒப்புக் கொண்டனர்.
4 பேருக்கு வாழ்வளித்த சிசு:
கடந்த 23ம் தேதியன்று மாலை 7.50 மணியளவில் அந்த குழந்தை பிறந்தது. தொடர்ந்து அந்த குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு, வெள்ளிக்கிழமை இரவு குழந்தையின் சிறுநீரகங்கள், கருவிழிகள் மற்றும் மண்ணீரல் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன. பின்பு அந்த உறுப்புகள் நான்கு பிஞ்சு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டன. வாழ்வின் மிகவும் கடினமான சூழலுக்கு மத்தியிலும், சிறப்பான முடிவை எடுத்து நான்கு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய அந்த தம்பதியை பலரும் பாராட்டி வருகின்றனர். அதோடு, மரணத்திலும் நான்கு பேரின் உயிரைக் காபாற்றிய அந்த சிசுவுக்கும் பலரும் நெகிழ்ச்சியுடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.