உடலுறுப்புகள் தானம்... 5 பேர் வாழ காரணமாக அமைந்த 10 மாதக் குழந்தை!
கேரளாவில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி மதியம் நடைபெற்ற சாலை விபத்தில் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம், அவரது தாய், தாத்தா, பாட்டி என அனைவரும் படுகாயமடைந்தனர்.

கேரள மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த 5 பேருக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. இந்த செய்தி கேரள மாநில மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் மல்லப்பள்ளியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற 10 மாத குழந்தை உள்ளது. கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் கோட்டயத்திலிருந்து திருவல்லாவுக்கு இந்த குழந்தை தனது தாய், தாத்தா மற்றும் பாட்டியுடன் சென்று காரில் கொண்டிருந்தது. எம்.சி. சாலை வழியாகச் செல்லும்போது எதிர் திசையில் இருந்து வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக குழந்தை சென்ற கார் மீது மோதியது.
இதில் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம், அவரது தாய், தாத்தா, பாட்டி என அனைவரும் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கிய வாகனங்களில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் சங்கனாச்சேரி மற்றும் திருவல்லாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாமுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.
ஆனால் நிலைமை மோசமடைந்த நிலையில் பிப்ரவரி 7 ஆம் தேதி கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. இந்த நிலையில் ஒரு வார சிகிச்சையில் இருந்து அது பலனளிக்காமல் பிப்ரவரி 13 ஆம் தேதி குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த செய்தி குழந்தையின் குடும்பத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த மண்ணில் ஆசையாக வாழ வந்த குழந்தைக்கு இப்படி ஆகி விட்டதே என பெற்றோர் கதறி அழுதனர். இதற்கிடையில் நீங்கள் சம்மதித்தால் உங்கள் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டு அதன்மூலம் 5 பேர் தங்களின் புதுவாழ்வை தொடங்குவார்கள். அதன்மூலம் நீங்கள் உங்கள் குழந்தையை காண முடியும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தந்தை அருண் ஆபிரகாமும், தாயார் ஷெரின் ஆன் ஜானும் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தனர்.
இதனையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் உடலுறுப்புகள் மீட்கும் பணி நடைபெற்றது. அதன்படி ஒரு கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், ஒரு இதயம் மற்றும் இரண்டு கண்கள் ஆகியவை பெறப்பட்டது. இந்த கல்லீரல் திருவனந்தபுரத்தில் உள்ள KIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 மாத குழந்தைக்கு கல்லீரல் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு சிறுநீரகங்களும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தை சிறுநீரகவியல் வார்டில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கும், இதயம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா மருத்துவமனையில் இருக்கும் குழந்தைக்கும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த உடலுறுப்பு தானம் மூலம் கேரளாவின் இளைய உறுப்பு தானம் செய்தவராக குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் மாறியுள்ளார். குழந்தையின் குடும்பத்தினருக்கு பலரும் ஆறுதலும், வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.























