Tamil Nadu Corona LIVE: தமிழகத்தில் 20,000-க்கு குறைந்தது கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 07 Jun 2021 06:48 PM
20,000-க்கு குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை!

தமிழ்நாட்டில் படிப்படியாகக் குறைந்துவரும் கொரோனா தொற்றின் அளவானது, இன்று 19ஆயிரத்து 448-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய சில நாள்களைப் போலவே, குணமானவர்களின் எண்ணிக்கை தொற்றுப்பதிவைவிட அதிகமாகவே இருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 31ஆயிரத்து 360 பேர் குணமாகியுள்ளனர். சிகிச்சையில் இருந்தவர்களில் 351 பேர் உயிரிழந்தனர். தற்போது, மாநில அளவில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றியதால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தலிலும் மருத்துவமனை சிகிச்சையிலும் இருக்கின்றனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவைத் தொடர்ந்து புதிய சுகாதார கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது - பிரதமர் மோடி

ஏப்ரல்-மே மாதங்களில் மருத்துவ ஆக்சிஜன் தேவை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்தது. ஆக்சிஜன் சப்ளை வசதியை போர்க்கால அடிப்படையில் அதிகரித்து சாதித்துள்ளோம். சில தடுப்பூசி நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி உற்பத்தி செய்து வருகின்றன. கொரோனா சிகிச்சைக்கான மருந்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளன.ஆரம்பத்தில் தடுப்பூசி போடும் வேகம் குறைவாக இருந்தது தற்போது இந்த வேகம் அதிகரித்துள்ளது என்று பிரதமர் உரையாற்றி வருகிறார்

குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை தயாரிப்பது இந்தியாவின் சாதனை - பிரதமர் மோடி

குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை தயாரிப்பது இந்தியாவின் சாதனை என பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்

கொரோனா அரக்கனை அழிக்க, அதிகமாக தடுப்பூசி தயாரித்து அனுப்பிவருகிறோம் - பிரதமர் மோடி

கொரோனா அரக்கனை அழிக்க, அதிகமாக தடுப்பூசி தயாரித்து அனுப்பிவருகிறோம் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்

புதுச்சேரியிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து, தமிழக அரசின் பாடத்திட்டங்களே புதுவையிலும் பின்பற்றப்படுவதால் புதுவையிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு மருந்து வாங்க ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கடந்த ஒரு வாரமாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், கடந்த மாதம் முதல் கருப்பு பூஞ்சை நோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை சுமார் ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட மருந்துகளை வாங்க கொரோனா நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 25 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 280 கோடியே 26 லட்சம் நிவாரணமாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினசரி 20 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கு தனியார் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர், கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களுக்கு தோல் வியாதிகள்

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தினசரி எண்ணிக்கை தற்போது  1 லட்சம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் குணம் அடைந்து வீடு திரும்பி வரும் நிலையில், அவர்கள் பலருக்கு தோல் வியாதிகள், முடி உதிர்வது உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லி, மும்பை நகரங்களில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் தோல் வியாதிகளுக்காக சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ளது.  


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 

நாடு முழுவதும் 36.63 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில அரசுகளும் விதித்து வருகின்றன. அதே நேரத்தில் தடுப்பூசிகளை அதிகரிப்பது, பரிசோதனைகளை அதிகரிப்பது உள்ளிட்ட பணிகளையும் அதிகரிப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 36 கோடியே 63 லட்சத்து 34 ஆயிரத்து 111 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இ-பதிவு சேவை இணையதள சேவை முடங்கியது

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது. எலக்ட்ரீசியன், பிளம்பர் ஆகிய சுய தொழில் செய்பவர்கள் இ-பதிவு முறை மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், இனறு காலை முதல் தமிழ்நாடு முழுவதும் பலரும் ஒரே நேரத்தில் இ-பதிவு செய்ய முயற்சி செய்து வருவதால், அந்த சேவைக்கான இணையதளம் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  

இந்தியாவில் இன்று 1 லட்சம் பேருக்கு கொரோன தொற்று உறுதி

நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 9 ஆயிரத்து 975 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 7 நாட்களாக 20 லட்சத்திற்கும் குறைவாக நாடு முழுவதும் பதிவாகி வருகிறது.

Background

தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 20 ஆயிரத்து 421 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 33 ஆயிரத்து 161 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். ஒரே நாளில் 434 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 645 நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 44 ஆயிரத்து 289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.