பானகம்... வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம். இதைப் பானகம், பானகரம், பானக்கரம் என்றும் சொல்வார்கள். கிராமப்புறங்களில் இது பிரபலம். குறிப்பாக, கோயில் விழாக்களில் பால் குடம் சுமப்பது, காவடி எடுப்பது போன்ற கடுமையான நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு மட்டுமன்றி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இது ஓர் உற்சாகப் பானம் என்றால் மிகையாகாது.
இனிப்பும், புளிப்பும் கலந்த இந்தப் பானகம், கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் உடலின் மொத்தக் களைப்பையும் நீக்கி, அவர்களுக்குப் புதுத்தெம்பை ஏற்படுத்தி, அவர்களது பக்தி பரவசத்துக்குத் துணை புரியும். இதனால்தானோ என்னவோ, இது பெரும்பாலும் திருவிழாக்காலங்களில் உட்கொள்ளும் ஒரு பானமாகவே மாறி விட்டது. மற்ற நாட்களில் நாம் இதை மறந்து விடுகிறோம்.
பானகம் என்பது வெறும் ஆற்றல் தரும் பானமாக மட்டுமல்லாமல், ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அளப்பரியது என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, இது ஆயுர்வேதத்தில் குளுக்கோஸுக்கு நிகரான ஒன்று என்பதோடு, ஏராளமான ஆரோக்கியப் பலன்களையும் தரக்கூடியது என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். மேலும், ஆயுர்வேதத்தில் அதன் பங்கு என்ன என்பது குறித்தும் விவரிக்கிறார்.
பானகம் என்பது இனிப்பு, புளிப்புச் சுவை மிகுந்தும், காரம் குறைவாகவும் சேர்க்கப்பட்ட ஒரு பானம். ஆயுர்வேதத்தில் இது, 'பானக கல்பனா' என்று சொல்லப்படுகிறது. 'கல்பனா' என்றால் தயார் செய்தல் என்று பொருள். ஆயுர்வேதத்தில் உடனடி நிவாரணம் தரும் மருந்து தயாரிப்பு முறைகளில் இதுவும் ஒன்று. அதாவது, சில மருந்துகளைச் சாப்பிட்டால் முதலில் ஜீரணமாகும். அதன்பிறகு ரத்தத்தில் கலந்து மெட்டபாலிசத்தை அதிகரித்துப் பின், அதன் வேலையை மெதுவாகத் தொடங்கும். இதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் பானகம் என்பது சாப்பிட்ட உடனே விரைவாக அதன் பணியைச் செய்யும் மருந்தாகும். இதனால்தான் இதைக் குடித்ததும் உடனடி ஆற்றல் கிடைக்கிறது. எனவே, இதை மருத்துவத்தில் உள்ள குளுக்கோஸுக்கு முன்னோடியாகச் சொல்லாம்.
இதன் மகத்துவம் தெரிந்தால், நம் முன்னோர் திருவிழாக்காலங்களில் பக்தி பரவசநிலையில் செய்யும் நேர்த்திக்கடன் மற்றும் கூட்ட நெரிசலில் பக்தர்களுக்கு ஏற்படும் டிஹைட்ரேஷனுக்குத் தீர்வாக இந்தப் பானகம் வழங்குவது வழக்கத்தில் உள்ளது. ஆயுர்வேதத்தில் எலுமிச்சை, புளி, அன்னாசி, மாதுளை பானகம் எனப் பல வகைப் பானகங்கள் உள்ளன. ஆனால், எலுமிச்சை, புளி கலந்த பானகம்தான் மக்களிடையே பிரபலமாக உள்ளது.
பொதுவாக, பானகம் தயாரிப்பில் பழச்சாறுதான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், புளி, பேரீச்சம்பழம் போன்றவற்றைத் தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும். இதை மிதமான சூட்டில் சூடுபடுத்தியும் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
வெல்லம் - 2 கப்,
புளி - எலுமிச்சைப்பழ அளவு,
உப்பு - 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்,
எலுமிச்சைப்பழம் - 5,
தண்ணீர் - 6 லிட்டர்,
ஏலக்காய் - 6 (பொடிக்கவும்),
சுக்குத்தூள் - 6 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 3 டீஸ்பூன்,
அலங்கரிக்க புதினா இலை - சிறிது
செய்முறை
முதலில் வெல்லத்தையும் புளியையும் தனித்தனியே சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து, இத்துடன் சுக்குத்தூள், மஞ்சள்தூள், ஏலக்காய்த்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து கலக்கவும். பின்பு எலுமிச்சைச்சாறு, புதினா இலைகள் சேர்த்து கலந்து அலங்கரித்து பரிமாறலாம். இப்போது பானகம் ரெடி