முற்றிலுமாக இயற்கை விவசாயத்திற்கு மாறிய உலகின் முதல் மாநிலம் என்ற பெருமை சிக்கிமுக்கு கிடைத்துள்ளது. லண்டன் உலக சாதனை புத்தகத்தால் சிக்கிம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள அசாதாரண பதிவுகளை பட்டியலிட்டு சரிபார்க்கும் ஒரு அமைப்பாக லண்டன் உலக சாதனை புத்தகம் விளங்குகிறது.
100 சதவிகிதம் இயற்கை விவசாய கொள்கையை அமல்படுத்திய முதல் மாநிலம் சிக்கிம் என்பது இந்த அங்கீகாரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. "சிக்கிம் மாநிலம் உலகின் முதல் இயற்கை விவசாய மாநிலமாகவும், சிறந்த நிர்வாகத்துடன் குற்றங்கள் இல்லாத மாநிலமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1960களில், பசுமை புறட்சியின் மூலம் இந்தியாவில் பயிர் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. நாட்டிற்கு தேவையான உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், அந்த காலக்கட்டத்தில் இந்திய வேளாண்துறையில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. நீர், காற்று, நிலம் உள்ளிட்ட நமது விவசாயம் இதனால் பாதிப்புக்கு உள்ளாகிறது.
சுற்றுச்சூழலில் இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இயற்கை விவசாயத்திற்கு மாறிய முதல் மாநிலமாக சிக்கிம் உருவெடுத்துள்ளது. உலகுக்கே எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. இந்த சாதனையின் காரணமாக, சிறந்த கொள்கைகளுக்கான ஆஸ்கர் விருதினை சிக்கிமுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
இயற்கை விவசாயம் என்றால் என்ன?
இயற்கை விவசாயம் என்பது ஒரு பசுமையான பழங்கால முறையாகும். இதன் மூலம் சுற்றுச்சூழல் தூய்மையாக உள்ளது. நிலத்தின் இயற்கையான தன்மையும் பராமரிக்கப்படுகிறது. இதன் பயன்பாட்டினால், மண் வளமாக உள்ளது. வறட்சி போன்ற சூழ்நிலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
மேலும், இயற்கை விவசாயத்தின் போது ரசாயன உரங்களுக்கு பதிலாக படிம உரங்களும், பூச்சிக்கொல்லிகளுக்கு பதிலாக கரிம உரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கை விவசாயத்தில், மாட்டு சாணம், உரம், பசுந்தாள் உரம், உயிர் பூச்சிக்கொல்லி மருந்து, மண்புழு உரம், வேப்பம் பிண்ணாக்கு, எலுமிச்சை புல் மற்றும் பழ எச்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் மாறியது எப்படி?
சிக்கிமை இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக மாற்ற, 75,000 ஹெக்டேர் நிலம் இயற்கை விவசாய நிலமாக மாற்றப்பட்டது. இரசாயனப் பூச்சிக்கொல்லிகளுக்குப் பதிலாக கரிமப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்த செயல் திட்டத்தில் சிக்கிம் அரசு ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை தடை செய்தது. மேலும், இந்த சட்டத்தை மீறினால் ஒரு லட்சம் அபராதம் உட்பட மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போதைய முதலமைச்சர் பவன் சாம்லிங், சிக்கிம் மாநில வாரியத்தை உருவாக்கினார். சுவிட்சர்லாந்து உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்பட நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பல விவசாய மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் சிக்கிம் மாநிலம் கூட்டு சேர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டன.