திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலைகள் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது. காலை 8 மணிக்கு பின்னரும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி தங்களது வாகனங்களில் செல்கின்றனர். மேலும் அன்றாட பணிகளுக்கு செல்வோரும் பாதசாரிகளும் உடற்பயிற்சி மேற்கொள்வோரும் இந்த பனிப்பொழிவு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலயக் குளம் முழுவதும் பனி மூட்டத்தின் காரணமாக குளம் முழுவதும் மூடுபனியால் மறைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று சொர்க்கவாசல் திறப்பு காரணமாக திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவில் மற்றும் புலிவலம் பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகாலை முதல் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடுமையான பனிப் பொழிவின் காரணமாக கோயிலுக்குச் செல்பவர்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் வழக்கமாக போகிப் பண்டிகை தினமான இன்று அதிகாலை முதலே கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பொங்கல் பண்டிகைக்கான பொருட்களை வாங்கி வருவது வழக்கம். ஆனால் இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக கடை வீதிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகம் இல்லாமல் காட்சியளிக்கிறது. இதனால் சிறு குறு வியாபாரிகள் பொங்கல் பண்டிகையை நம்பி கடை வைத்தவர்கள் மிகுந்த கவலைக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயிகள் அறுவடை பணிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வயல்களில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளதால் எந்திரங்களும் வயல்களில் இறங்கி அறுவடை செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சம்பா தாளடி நெல் பயிர்கள் அறுவடை பணிகள் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில் இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக அறுவடை பணிகளில் தாமதம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் ஈரத்துடன் கூடிய நெல் மணிகளை அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அதனை அரசு அதிகாரிகள் கொள்முதல் செய்ய மாட்டார்கள் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத ஈரப்பதம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தற்போது நிலவிவரும் இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக 25% வரை ஈரப்பதம் ஏற்படும் எனவும், எனவே ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் கொள்முதல் நிலைய அதிகாரிகளும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளும் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.