Just In





பருவ நிலை மாற்றம்... பச்சையாக மாறிய கடல் நீர் - உயிரிழக்கும் கடல் ஆமை: என்ன நடக்கிறது தூத்துக்குடியில்?
பருவநிலை மாற்றம் காரணமாக கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடலில் வெப்பம் அதிகரிப்பதால் நுண்ணுயிர் பாசி படலம் பெருகுதல் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான அரியவகை உயிரினங்கள் உள்ளன. இந்த உயிரினங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதன்படி கடல் பகுதியில் பாசிப்படலங்கள் அதிகமாக உருவாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள உயிரினங்கள் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன.

கடந்த மாதம் தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கடல் பச்சை நிறமாக காட்சி அளித்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு பாசிகள் காணாமல் போயின. இந்த நிலையில் நேற்று மீண்டும் புதிய துறைமுகம் கடற்கரையில் பச்சை நிறமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதிக்கு வந்த மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
இது குறித்து தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல்ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி திரவியராஜ் கூறும் போது, கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடலில் வெப்பம் அதிகரிப்பதால் நுண்ணுயிர் பாசி படலம் பெருகுதல் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2008-ம் ஆண்டு முதல் முறையாக மண்டபம் பகுதியில் இந்த நுண்ணுயிர் பாசிப்படலம் காணப்பட்டது. இதனை தொடர்ந்து 2019-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த நுண்ணுயிர் பாசிப்படலம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக ஏற்கனவே கீழக்கரை பகுதியில் மீன்கள் செத்து ஒதுங்கின. இந்த நிலையில் தூத்துக்குடி கடல் பகுதியிலும் நுண்ணுயிர் பாசிப்படலம் பரவத் தொடங்கி இருக்கிறது.
இது நாக்டிலுகா என்ற நுண்ணுயிர் கடல் பாசி ஆகும். இந்த பாசி அதிக அளவில் ஆக்சிஜனை எடுத்து வேகமாக பல்கி பெருகும். இதனால் கடல் பச்சை நிறமாக காட்சி அளிக்கும். அதே நேரத்தில் கடலில் உள்ள ஆக்சிஜனை எடுத்துவிடுவதால், அந்த பகுதியில் உள்ள பவளப்பாறைகள், மீன்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் ஆக்சிஜன் கிடைக்காமல் போகும். ஒரு வாரத்துக்கு மேல் பாசிப்படலம் ஒரே இடத்தில் இருந்தால், அந்த பகுதியில் உயிரினங்களுக்கு உயிரிழப்பு போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதே நேரத்தில் அதிக காற்று அடித்தாலோ, மழை பெய்தாலோ இந்த பாசிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அடித்து செல்லப்பட்டு விடும். வழக்கமாக அக்டோர் மாதம் அதிகமாக காணப்படும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்த பாசிப்படலம் நீடித்து வருகிறது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி துறைமுக பகுதியில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதியில் வாழும் அரியவகை பச்சை கடல் ஆமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த உயிர்கோள காப்பக அலுவலர்கள், ஆமை அடிப்பட்டு இறந்ததா அல்லது கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக உயிரிழந்ததா என பரிசோதனை செய்தனர். உயிரிழந்த கடல் ஆமை சுமார் 80 கிலோ எடை கொண்ட ஆண் ஆமையாகும்.