உணவுச் சங்கிலி மற்றும் உலகை இயக்கி கொண்டிருக்கும் மகரந்தச் சேர்க்கைக்கு காரணமான பூச்சிகள் தற்போது ஆபத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.


வெப்பநிலை மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள் வனப் பூச்சிகளின் எண்ணிக்கையைப் பாதிக்கும் என்பதால் எதிர்கால காலநிலை மாற்றங்கள் வனப் பூச்சிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சில சந்தர்ப்பங்களில், பூச்சிகளின் இனப்பெருக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கலாம். சில நேரங்களில், அது திடீரென நின்று விடலாம்.




புதிய ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?


நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, இயற்கை சூழல்களுடன் ஒப்பிடுகையில், வேலாண் மண்டலங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தால் அதிக வெப்பநிலை ஏற்படும் பகுதிகளில் பூச்சிகளின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.


20 ஆண்டுகளில், 1992 முதல் 2012 வரை, தேனீக்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் உள்பட சுமார் 20,000 வெவ்வேறு வகையான பூச்சிகள் பற்றிய 750,000 க்கும் மேற்பட்ட பதிவுகளை லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.


நில பயன்பாடு மற்றும் வெப்பநிலை மாறுபாடு காரணமாக பூச்சிகளின் இனப்பெருக்கம் எவ்வாறு பாதிப்புக்குள்ளானது என்பதை மதிப்பிடுவதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாக இருந்தது. மனித இனத்தின் செயல்பாடு இதில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.




குறிப்பாக வெப்பமண்டல பகுதிகளில் பூச்சி வகைகளின் எண்ணிக்கை 29% குறைந்துள்ளது. எவ்வாறாயினும், குறைந்த பட்சம் 75 சதவீத நிலப்பரப்பில் இயற்கையான வாழ்விடங்கள் மற்றும் ஒற்றைப்பயிர்ச் செயல்பாடுகள் எதுவும் இல்லாத இடத்தில், வெப்பநிலை உயர்ந்திருந்தாலும், பூச்சிகளின் எண்ணிக்கை 7% மட்டுமே குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆய்வாளர் சார்லி அவுட்வைட் கூறுகையில், "எங்கள் கண்டுபிடிப்புகள் பதைந்திருக்கும் உண்மையில் ஒரு சிறிய உண்மையை மட்டுமே வெளிக்கொண்டு வந்துள்ளது. சில இடங்களில், குறிப்பாக வெப்பமண்டலங்களில் பூச்சிகளின் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டோம்" என்றார்.


பூமிக்கு பூச்சிகள் ஏன் முக்கியம்?


பூமி தொடர்ந்து இயங்குவதற்கு பூச்சிகளை சார்ந்துள்ளது. ஆபத்தான பூச்சி இனங்களைக் கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. மண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இறந்த உயிரிழங்களை அழுக வைப்பதன் மூலம் அளிக்கின்றன. பழங்கள், மசாலாப் பொருட்கள், சாக்லேட் செய்ய தேவைப்படும் கோகோ போன்ற பல முக்கிய உணவுப் பயிர்கள், பூச்சிகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கையின் விளைவாக உற்பத்தியாகின்றன.


எனவே, பூச்சிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதை ஆராய்ச்சிகள் உறுதிபடுத்துவது கவலை அடைய செய்துள்ளது.




செய்ய வேண்டியது என்ன?


விவசாயம் சார்ந்த தாவரங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்திருக்கும் பூச்சிகள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும். இந்த விளைவுகள் சிக்கலானதாக இருந்தாலும், ஆபத்தான பூச்சிகளுக்கான அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று ஆய்வு கூறுகிறது. இதற்கு ஏற்றவாறு திட்டங்களை வகுக்க பிழை கண்காணிப்பு, முன்கணிப்பு ஆகியவை தேவைப்படுகிறது.


நாடுகள் இதுகுறித்து கண்காணிக்க வேண்டும். தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். மேலும் வரலாற்றுத் தரவுகள் மற்றும் மாடலிங் மூலம் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்குவதற்கும் தயாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.