சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பதாகைகளை திமுகவினர் சிலர் வீசியெறிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. 159 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. இதில், திமுக 125 இடங்களை கைப்பற்றியது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பது உறுதியான நிலையில் மே 7 ம் தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கொரோனா விதிகள் அமலில் இருப்பதால் பெரிய அளவில் விழா நடத்த முடியாது. இருப்பினும் கவர்னர் மாளிகையில் எளிய நிகழ்ச்சி மூலம் ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், சென்னை முகப்பேர் மேற்கு ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் திமுகவினர் சிலர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பதாகைகளை உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். அம்மா உணவகத்தில் புகுந்த திமுகவை சேர்ந்த சிலர் ஜெயலலிதா படங்களை வைக்க கூடாது எனக்கோரி பதாகைகளை வீசியெறிந்தனர். மேலும், உள்ள இருந்த காய்கறி, மளிகை பொருட்களை எல்லாம் தூக்கி வீசியெறிந்தனர்.
இதையடுத்து, திமுக கட்சியினர் சிலர் தாக்கியதாக உணவக ஊழியர்கள் மதுரவாயல் போலீசாரிடம் புகார் கூறினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வைரலனாதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பே திமுகவினர் வன்முறை அராஜகத்தை தொடங்கியுள்ளதாக கருத்து கூறி வருகின்றனர்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப் படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது..மழை வெள்ள காலம்,கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.. <a >pic.twitter.com/SAMdgVApDh</a></p>— DJayakumar (@offiofDJ) <a >May 4, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இதனிடையே, இந்த சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஏழை, எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது. மழை வெள்ள காலம் மற்றும் கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்’ எனப்பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுகவினர் சம்மந்தப்பட்ட அம்மா உணவகம் முன்பு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார் என அறிய தமிழகம் காத்திருக்கிறது.