பொம்மிடி அருகே கிறிஸ்துவ ஆலயத்துக்குள் நுழைந்து மிரட்டியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

 

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தருமபுரி மாவட்டத்தில் கடந்த 7 மற்றும் 8-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் 'என் மண், என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கடந்த 8-ம் தேதி மாலை பாப்பிரெட்டிப்பட்டிக்கு நடைபயணம் மேற்கொள்ள செல்லும்போது பொம்மிடி அருகே உள்ள பிற.பள்ளிப்பட்டி புகழ்பெற்ற புனித லூர்து அன்னை மாதா ஆலயத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக சென்றார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அண்ணாமலை ஆலயத்துக்குள் வரக்கூடாது என்றும், மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என தடுத்து நிறுத்தினர். அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு கோஷங்கள் எழுப்பினர்.



 

அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை இளைஞர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த இளைஞர்கள், மணிப்பூர் கலவரத்தில் தேவாலயங்கள் இடிக்கப்பட்டதாக கேள்வி எழுப்பினர். அப்பொழுது கேள்வி கேட்காமல் எங்கே போனீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதனால், அங்கு அண்ணாமலைக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மணிப்பூரில் நடந்த கலவரம் குறித்து அண்ணாமலை இளைஞர்களிடம் எடுத்துக் கூறினார். மேலும், இலங்கையில் கலவரம் ஏற்பட்டு தமிழர்கள் இறந்தபோது யாரும் கேட்கவில்லை. நீங்கள் சம்பந்தமே இல்லாமல் திமுகவினர் போல பேசக்கூடாது என்று அவர் பேசினார். அனைவருக்கும் ஆலயத்துக்குள் வர உரிமை உள்ளது‌. இந்த ஆலயம் உங்கள் பெயரில் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.



 

இதுகுறித்து பி.பள்ளிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் ( 28) என்பவர் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் பி.பள்ளிப்பட்டி லூர்து புரத்தில் உள்ள புனித அன்னை ஆலயத்திற்கு அண்ணாமலை வந்தபோது, அவரிடம் கிறிஸ்துவ மக்களின் உரிமையை கேட்டு அவரை மாதா சிலைக்கு மாலை போட அணுமதிக்காமல் இருந்ததால், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும், இளைஞர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அண்ணாமலை இந்த கோவில் உங்கள் பெயரில் இருக்கா? தடுக்க உரிமை இருக்கா? எனக் கேட்டு, இங்க வந்து 10 ஆயிரம் பேரோடு தர்ணா செய்தால் என்ன செய்வீர்கள்? என கேட்டு  மிரட்டியதாக கொடுத்த புகாரின் பேரில் பொம்மிடி காவல் துறையினர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு பேசுவது, பொது அமைதியை குலைக்க தூண்டும் வகையில் பேசுவது, வெவ்வேறு வகுப்புகளுக்கிடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் பேசுவது என

153 (1)(a), 504, 505 (2) உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.