வத்தல் மலையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 360 ஏக்கரில் பயிரிட்டு இருந்த மிளகு செடிகள் கருகியதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


தருமபுரி மாவட்டம் வத்தல் மலையில் பெரியூர், சின்னாங்காடு, ஒன்றிய காடு, நாயக்கனூர் பால் சிலம்பு, கொட்டாலங்காடு உள்ளிட்ட ஏழு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு காபி மிளகு மற்றும் காக்கட்டான் பூ உள்ளிட்ட பூ வகைகள் மற்றும் சில்வர் ஹூக் மரங்கள் தோட்டப்பயிர்கள், குச்சி கிழங்கு, சாமை, திணை, கேழ்வரகு போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகிறது.  


மழை இல்லாமல் கருகிப்போன மிளகு செடி


இதில் மிளகு மட்டும் சுமார் 360 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. மிளகு விவசாயம் மூலம் இங்குள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் பல லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர். இந்நிலையில் நடப்பாண்டில் தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்தது. மேலும் இதுவரை கோடை மழை பெய்யவில்லை. இதனால் வழக்கத்தை விட அதிக வெயில் நிலவி வருகிறது. ஏரிகள், குளங்கள் அணைகளில் நீர் வறண்டு காணப்படுகிறது. வெயில் கடுமையாக நிலவி வருகிறது. வத்தல் மலையில் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மிளகு பயிர்கள் வெயிலுக்கு கருகிவிட்டது.


இதுகுறித்து  வத்தல் மலையில் உள்ள பெரியூர் சேர்ந்த விவசாயி ஆனந்தன் கூறியதாவது:-  வத்தல் மலையில் மிளகை சுமார் 360 ஏக்கரில் பயரிடப்பட்டுள்ளோம் நடப்பாண்டில் பருவமழை முற்றிலும் பொய்த்து விட்டது. இதனால் வத்தல்மலையில் உள்ள விவசாய கிணறுகள் அனைத்தும் வறண்டு விட்டன. பெரியூர் 100 ஏக்கர், பால் சிலம்பில் 150 ஏக்கர், ஒன்றிய காடு கிராமத்தில் 30 ஏக்கர், சின்னங்காடு கிராமத்தில் 50 ஏக்கர், கொடலங்காடு கிராமத்தில் 10 ஏக்கர் என 360 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மிளகு பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி விட்டன. மிளகு ஒரு ஏக்கருக்கு 800 செடி வரை நடவு செய்யலாம். ஒரு செடி காய் பிடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகும் அதன் பிறகு மருந்து தெளிப்பது உரம் தண்ணீர் ஆகியவற்றை பொறுத்து ஒரு மரத்திற்கு மூன்று கிலோ மிளகு கிடைக்கும் 10 ஆண்டு க்குப் பின்னரே 10 கிலோ வரை மிளகு கிடைக்கும் ஒரு ஏக்கருக்கு ஒரு டன் வரை மிளகு மகசூல் கிடைக்கும். தற்போது வெயிலுக்கு நாங்கள் பயிரிடப்பட்டுள்ள அனைத்து செடிகளும் வேரோடு கருகிவிட்டது.  இனி மிளகு நாற்று வாங்கி வந்து தான் பயிரிட வேண்டும் அடுத்த ஆண்டு மிளகு கிடைக்காது. மீண்டும் வத்தல் மலையில் மிளகு மகசூல் கிடைக்க நாங்கள் சுமார் ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 800 முதல் 1000 மிளகு செடி நடவு செய்ய சுமார் 10,000 வரை ஆகும். 


அரசிடம் நஷ்ட ஈடு கேட்கும் விவசாயி


எனவே மாவட்ட நிர்வாகம் வத்தல்மலை கிராமத்திற்கு வேளாண் அதிகாரிகளை அனுப்பி மிளகு செடி பயிரிட்டுள்ள விவசாயிகளின் பாதிப்பை கணக்கெடுத்து உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்