தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கி உள்ளது. அருவியில் குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.


23 நாட்களாக ஏற்பட்ட வெள்ளம்


கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் அதனுடைய முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக அணைகளில் இருந்து அதிகளவில் உபரி நீர்  வெளியேற்றபட்டது. இதன் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்து இரு கரையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஒகேனக்கல் முழுவதும் பாறைகளை தெரியாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டது.


இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த ஜூலை மாதம் 15 தேதி முதல் தொடர்ந்து 23 நாட்களாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து. தொடர்ந்து 23 நாட்களாக பரிசல் இயக்காமல் பரிசல் துறை முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. பரிசல் தொழிலாளர்கள் பரிசல் இயக்க முடியாமல் பாதிப்புக்கு ஆளாகினர்.


காவிரி ஆற்றில் குறைந்தது நீர்வரத்து


இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில்  நீர்வரத்து படிப்படியாக குறைந்து இன்று காலை நிலவரப்படி 8 ஆயிரம் கன அடியாக குறைந்தது.




பரிசல் இயக்க அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம்


ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கி மீண்டும் பரிசல் இயக்க உத்தரவிட்டது. இதனால் பரிசல் இயக்கம் தொழிலாளர்கள் தங்களுடைய பணியை இன்று முதல் துவங்கினர்.


சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை


அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கிறது. ஒகேனக்கல் முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதனால் தடுப்பு சுவர்கள் பழுது பார்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தப் பணி முழுவதும் முடிந்த பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்


மேலும் பரிசல் இயக்கமானது மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான சின்னாறு பரிசல் துறையில் இருந்து கோத்திக்கல் வழியாக தொங்கு பாலம், மெயின் அருவி, மணல் திட்டு வரை பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை அடுத்து இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் சுருளிநாதன் மற்றும் சகிலா, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி எம்.எல்.ஏ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


இந்த ஆய்வில் பெண்ணாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒகேனக்கல் பாலாஜி, கூத்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்க,ர் கூத்தப்பாடி ஊராட்சி செயலாளர் குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.