தருமபுரி அருகே சகோதரியை காதலித்தவரை பணியாற்றும் உணவகத்திற்கே சென்று, கொலை செய்ததாக, இரட்டை சகோதரர்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.




தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் கடந்த 6 ம் தேதி புதிதாக திறக்கப்பட்ட பிரபல பிரியாணி  ஓட்டல் செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலில் கிரில் மாஸ்டராக தருமபுரி வி.ஜெட்டி அள்ளியை சேர்ந்த முகமது ஆசிக் (25) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.


 நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் இரவு 9 மணிக்கு ஓட்டலுக்கு  4 பேர் வந்துள்ளனர். அப்போது அவர்களில் 2 பேர் முகமது ஆசிக்கிடம் பேசுவது போல் பாசாங்கு காட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முகமது ஆசிப் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். 


இதை பார்த்து ஓட்டலில் இருந்த ஊழியர்கள் தடுக்க முற்பட்டபோது அவர்களையும் கொலையாளிகள் கத்தியை காட்டி மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்து விலகி நின்றனர். இதனை தொடர்ந்து கத்தியால் குத்திய மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 


இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர் முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு  கொண்டு  சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது ஆசிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இந்த தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் மோப்பநாய் ரேடவ் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்த தடயங்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.


 மேலும் ஹோட்டலில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் கண்ட காவல் துறையினர் தனிப்படை அமைத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இந்த கொலை செய்யும் சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 


அப்போது முகமது ஆசிப் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் சகோதரர்கள் முகமது ஆசிப்பை கண்டித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் ஓமலூரைச் சேர்ந்த ஆசிப் காதலித்த பெண்ணின் சகோதரர்கள் தான் என காவல் துறையினர் விசாரணையில் உறுதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை காவல்துறையினர் ஓமலூர் சென்று விசாரணை நடத்தி சேலம் பகுதியில் பதுங்கி இருந்த ஜனரஞ்சன்,  ஜன அம்சபிரியன் இரட்டை சகோதரர்களை குறித்து விசாரணை நடத்தினார். 


இந்த விசாரணையில் முகமது ஆசிப் தனது சகோதரியை காதலித்து வந்ததாகவும் பலமுறை கண்டித்தும் கேட்காததால், இரட்டை சகோதரர்கள் ஜனரஞ்சன், ஜன அம்சபிரியன் இருவரும் முகமது அசிப்பை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். 


 இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு முகமது ஆசிப் வேலை செய்கின்ற பிரியாணி கடைக்கு, நண்பர்கள் கௌதம் (28), மற்றும்  நல்லம்பள்ளி அடுத்த சிவாடி பகுயை சேர்ந்த பரிதிவளவன் (24) ஆகியோருடன்  பிரியாணி ஒட்டலின் உள்ளே நுழைந்து, முகமது ஆசிப்பை அழைத்து பேசிக் கொண்டிருந்தபோது மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றது, காவல் துறை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.


 இதனை தொடர்ந்து ஒமலூர் அடுத்த செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஜனரஞ்சன், ஜன அம்சபிரியன், மற்றும் கௌதம், பரிதி வளவன் ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


மேலும் தருமபுரி அருகே சகோதரியை காதலித்த இளைஞரை, பெண்ணின் இரட்டை சகோதரர்கள் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.