கடந்த சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தியில் தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சனிக்கிழமை அன்று, அரை அடி முதல் 15 அடி வரை விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபட்டனர்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவு
இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை, கரைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஓகேனக்கல் காவிரி ஆறு, தென்பெண்ணை ஆறு, இருமத்தூர், நாகாவதி அ ணை, பாப்பிரெட்டிப்பட்டி வாணியார் அணை, கே ஈச்சம்பாடி அணை, தொப்பையாறு அணை உள்ளிட்ட ஏழு இடங்களில் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் விநாயகர் சிலை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று விநாயகர் சிலைகளை பாதுகாப்பாக கரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி அன்று வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை இன்று பெரும்பாலானார் ஆற்றில் கரைப்பதற்காக சிறிய வாகனங்கள் முதல் பெரிய லாரியில் வரையிலான வாகனங்களில் எடுத்துச் சென்றனர்.
விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் பக்தர்கள்
இதில் தருமபுரி மாவட்டத்தில் இருமத்தூர் தென்பெண்ணை ஆறு மற்றும் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு ஏராளமான சிலைகளை கரைப்பதற்காக எடுத்துச் சென்றனர். இதில் தருமபுரி மாவட்டம் இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் கரைப்பதற்காக ஏராளமானோர் வாகனங்களில் விநாயகர் சிலைகளை கொண்டு வந்தனர். அப்பொழுது விநாயகர் சிலைகளை கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் செய்து, உற்சாகமாக ஆற்றில் இறங்கி சிலைகளை கரைத்து வழிபட்டனர். மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி இரண்டு மாவட்டங்களுக்கு மையமான பகுதி என்பதால், இரண்டு மாவட்டத்திலிருந்து ஏராளமான சிலைகள் தென்பெண்னை ஆற்றில் கரைத்தனர்.
இதில் சுமார் அரை அடி உயரத்தில் இருந்து 7 அடி உயரம் முறையான விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்தனர். இந்த விநாயகர் சிலைகளை கரைக்க வந்த இளைஞர்கள் மேள தாளத்துடன் சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்து ஆற்றில் இறங்கி உற்சாகமாக சிலைகளை கரைத்து விளையாடினர்.
பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்
இந்த விநாயகர் சிலை கரைப்பின் போது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக, பாதுகாப்பு பணியில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆற்றங்கரை பகுதியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என காவல் துறையினர் பக்தர்களுக்கு எச்சரித்து வருகின்றனர். இதனால் காலை 10 மணி முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் விநாயகர் சிலையை எடுத்து வந்து கரைத்து வழிபட்டனர்.
கூட்ட நெரிசல்
இதனால் இருமத்தூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அந்தப் பகுதியை செல்லும் வாகனங்கள் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினார்.