தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனுக்களை பெற கிராமப் புறங்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து ரூ.445 கோடி மதிப்பில், பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் திறந்து வைத்தார். தொடர்ந்து 2637 பயனாளிகளுக்கு சுமார் ரூ.56 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து மகளிர் இலவச பயணத்திற்கான 20 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இதனை தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர், “சட்டமன்ற தேர்தலுக்கு முன் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று, நான் மக்களை சந்தித்தேன். அதற்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பெயர் வைத்தேன். கொளத்தூர் தொகுதி மட்டும் இல்லை, எல்லா தொகுதிகளும் என் தொகுதி தான் என மனுக்கள் வாங்கினேன். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் அதை நிறைவேற்றுவேன் என , மேடையிலே பெட்டியை பூட்டி எடுத்து சென்றேன். ஆனால் எதிக்ர்கட்சிகள் ஆட்சிக்கே வரப் போவதில்லை, நிறைவேற்றப் போவதில்லை என கேலி செய்தார்கள்.


ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்தீர்கள். ஆட்சிக்கு வந்தவுடன் 2 இலட்சத்து 212 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது‌. தேர்தல் முடிந்தவுடன் எங்கள் கடமை முடிந்தது என எண்ணாமல், இனிமே தான் கடமை தொடங்குது நினைத்து வேலை செய்தோம். இதில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் தனிப்பிரிவு, மக்களுடன் முதல்வர், முதல்வரின் முகவரி என பலப் பிரிவுகளில் மனுக்களை வாங்கி, தனி அலுவலர் வைத்து நிறைவேற்றி வருகிறோம். 


எல்லா பிரிவுகளின் கீழ் வாங்கும் மனுக்கள் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்படுகிறது. முதல்வரின் முகவரி திட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில், 72 ஆயிரம்மனுக்கள் வாங்கப்பட்டது.


நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக தருமபுரி மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிப்பு.


அரூர் அரசு மருத்துவமனை 51 கோடி மதிப்பில் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும். பஞ்சப்பள்ளி-அலியாளம் அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்படும். மோப்பிரிப்பட்டி, எச்.தொட்டம்பட்டி ஊராட்சிகளை இணைத்து அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். அரசநத்தம், சிட்லிங், சித்தேரி மலை கிராமமக்களுக்காக சிறு தானிய மதிப்பு கூட்டப்பட்ட தொழில்கள் ஏற்படுத்தப்படும். தீர்த்தமலையில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும். சட்டமன்ற தேர்தலின் போது, கூறியபடி பாரதிபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.


மேலும் சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் இது தான் திராவிட மாடல் அரசு. எல்லா வீட்டிற்கும் ஏதோ ஒரு வகையில் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என பணியாற்றி வருகிறோம். ஒன்றிய அரசு விருப்பு வெறுப்பின்றி செய்லபட வேண்டும். தொடர் தோல்விகளை சந்தித்தாலும் கூட, பாஜக பாடம் கற்கவில்லை.


இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. எல்லோருக்குமான அரசாக இருக்கிறது. இதுதான் எங்கள் தேர்தல் வெற்றியின் ரகசியம்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.