Corona LIVE Updates : பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் செல்வதை ரத்துசெய்ய வேண்டும் - தமிழக அரசு
Corona LIVE Updates : சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகம் முழுக்கவே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. முக்கிய நகரங்களில் மட்டுமே தடுப்பூசி கிடைப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
குடமுழுக்க விழாவை 50 நபர்களுடன் நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டு உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதியதாக குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதியில்லை.
- தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதியில்லை.
- வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டள்ளது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் செயல்பட வேண்டும். இதன்படி, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும்.
அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர் கடைகளில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு 26-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் தடை விதிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள சென்னை உள்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட நாளை மறுநாள் முதல் தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஸ்பா, அழகு நிலையங்கள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், பார்கள் இயங்க அனுமதியில்லை. மேலும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதியில்லை என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை காலை 4 மணி முதல் அமலுக்கு வருகிறது.
கொரோனாவின் மோசமான சூழலை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்கவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களை அச்சுறுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. நாட்டின் உண்மையான நிலையே அதுதான் என மத்திய அரசு டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனாவின் மோசமான சூழலை எதிர்கொள்ள மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என டெல்லி நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
கொரோனாவின் மோசமான சூழலை எதிர்கொள்ள மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? என டெல்லி நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு மே மாதத்தில் 19 ஆயிரத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் எச்சரிக்கை
மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டுக்கு வந்தன. வந்திருக்கும் கொரோனா தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
சீரம் இன்ஸ்டிட்யூட் அறிவிப்பை தொடர்ந்து மாநில அரசுகள் தடுப்பூசிகளை ரூ.400க்கு வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம் “கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு வாங்கும் விலை ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மத்திய அரசு மூலம் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் தடுப்பூசிகள் இலவசமாகவே கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன். ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் சேர்த்து மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்
கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் இன்று இரவு முதல் திங்கள் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். 30 மணி நேரத்துக்கு ஊரடங்கு அமலில் இருக்கும். அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்கும். மக்கள் வெளியே வர தடை உள்ளது.
சென்னை அண்ணாநகர் மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. ஒரு நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கலனை அமைக்க திட்டமிட்டுள்ளோம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன்
ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால் புதியதாக நோயாளிகளை சேர்க்க முடியாது என்றும் மீண்டும் ஆக்சிஜன் விநியோகம் தொடங்கும் வரை அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை வெளியே அனுப்புவதாகவும் டெல்லியில் உள்ள சரோஜ் மருத்துவமனை பொறுப்பாளர் அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் தானாகவே ரெம்டெசிவிர் மருந்துகள் வாங்கிப்போட்டுக்கொள்ள கூடாது. தமிழகத்தில் தற்போது 40% படுக்கைகள் காலியாக உள்ளன. பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவியக்கூடாது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு
டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர் ; மேலும் 200 பேரின் நிலை என்னவாகும் என தெரியாத சூழல் உள்ளது. இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்சிஜன் உள்ளது என ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனை கூறியுள்ளது.
கொரோனா தொடர்பான இறக்குமதி பொருட்களை அவசரமாக கருதி உடனடியாக சுங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சுங்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கொரோனா தொடர்பான பொருட்கள் உடனடியாக வந்து சேர்வதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்பால் இரண்டாயிரத்து 624 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழக்கம் போல் கிடைக்க வேண்டிய 300 தடுப்பு மருந்துகள் 200 ஆக குறைக்கப்பட்டு விட்டது. அதிலும் கோவாக்சின் தடுப்பு மருந்து வராமல் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் கடந்த மாத துவக்கம் முதல் கோவாக்சின் ஊசி செலுத்தி கொண்டவர்கள் இரண்டாவது தவணை ஊசியை அரசு அறிவித்துள்ள நாட்களில் (கோவாக்சின் நான்கு வார இடைவெளியிலும் கோவிஷீல்ட் ஆறு வார இடைவெளியிலும்) செலுத்த இயலாமல் தவிக்கின்றனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று ஒரே நாளில் இந்தியா முழுக்க 3 லட்சத்து 46ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 2624 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
Background
தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக 11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று ஒரேநாளில் 13 ஆயிரத்து 776 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரேநாளில் 13 ஆயிரத்தை கடந்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் நேற்று ஒரேநாளில் 8 ஆயிரத்து 78 நபர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று மாநிலம் முழுவதும் 78 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகம் முழுக்கவே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. முக்கிய நகரங்களில் மட்டுமே தடுப்பூசி கிடைப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசு ஆக்சிஜன் தேவையை நிறைவுசெய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டுசெல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என முதல்வர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -