கோவை சுண்டாகாமுத்தூர் - புட்டுவிக்கி சாலையில் டாஸ்மாக் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பரமேஸ்வரன் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மதுபானக் கடைக்கு வந்த ஒரு வாலிபர் 500 ரூபாய் நோட்டை பரமேஸ்வரனிடம் கொடுத்து, மதுபானம் கேட்டுள்ளார். அந்த ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்ட பரமேஸ்வரன், அதனை சரி பார்த்த போது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதேபோல 4 நாட்களுக்கு முன்னரும் 500 ரூபாய் நோட்டை கொடுத்து மதுபானம் வாங்கியதும் தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து பரமேஸ்வரன் அந்த வாலிபரிடம் கள்ள நோட்டு எனக்கூறி விசாரித்துள்ளார். அப்போது தப்பியோட முயன்ற அந்த வாலிபரை மற்ற ஊழியர்கள் துணையுடன் வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அப்போது 28 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 57 ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த வாலிபரை குனியமுத்தூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து காவல் துறையினர் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் மதுக்கரை மலைநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது21) என்பதும், எலக்ட்சீயனாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அப்போது கீழே கிடந்ததை இந்த கள்ள நோட்டுகளை எடுத்து வந்ததாக ரமேஷ் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். 


இதையடுத்து ரமேஷிடம் இருந்து 28 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 57 ஐநூறு ரூபாய் நோட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். 500 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது என்பது காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் ரவிசந்திரன் அளித்த புகாரின் பேரில், குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ரமேஷை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


இதேபோல கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள வரதராஜபுரம் மேடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். கடந்த 8ம் தேதியன்று இவரது செல்போன் எண்ணுக்கு நாப்டால் இணையதளத்தில் இருந்து பரிசு விழுந்து உள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. பின்னர் ஒரு நபர் போனில் அழைத்து சசிகுமாரிடம் பேசியுள்ளார். அப்போது பரிசுகளை வழங்க ஜி.எஸ்.டி வரி, ஆர்.பி.ஐ. வரி, பணப்பரிவர்த்தனை கட்டணம், பண பாதுகாப்பு கட்டணம் ஆகியவைகளுக்காக பணம் செலுத்த வேண்டுமென அந்த நபர் கூறியுள்ளார். இதனை நம்பிய சசிகுமார் 13 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.


பின்னர் அந்த நபரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மேலும் அந்நபரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சசிகுமார் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தார். இந்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோசடியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.