கோயம்புத்தூர் மாவட்டம் தம்மம்பதி பகுதியைச் சேர்ந்த சரோஜினி என்பவருக்கு, அவரது கணவர் மணிகண்டனுடன் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் சரோஜினி கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

Continues below advertisement

இந்த நிலையில், தனது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாகக் கருதிய குழந்தையை சரோஜினி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2012ஆம் ஆண்டு தம்மம்பதி பகுதியில் குழந்தையின் கழுத்தை நெரித்து சரோஜினி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து குழந்தையின் தந்தையான மணிகண்டன் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சரோஜினி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Continues below advertisement

இந்த வழக்கு வால்பாறை நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கில் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், போலீசார் சேகரித்த ஆதாரங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகளை பரிசீலித்த நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பை வழங்கியது.

வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது சொந்த குழந்தையை கொலை செய்த சரோஜினிக்கு ஆயுள் தண்டனை விதித்து வால்பாறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

14 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தம்மம்பதி பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.