முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, ஜெயலலிதா உடன் கோடநாடு பங்களாவில் தங்குவது வழக்கம். கடைசியாக 2016-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கோடநாடு பங்களாவில் தங்கியிருந்தனர். அதன்பின் 2017ல் இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகு சசிகலா அங்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா கொடநாடு எஸ்டேட்டிற்கு செல்ல உள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், காரில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
மூன்று நாட்கள் கோடநாடு எஸ்டேட்டில் தங்கும் சசிகலா, நாளை காலை கோடநாடு பங்களாவின் முன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை அமைக்க பூமி பூஜை செய்கிறார். அதனை தொடர்ந்து தனது முக்கிய ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துகிறார். கோடநாடு பங்களாவிற்கு முன் அமைக்கப்படும் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அவரது பிறந்தநாளை ஒட்டி சசிகலா திறந்து வைக்க உள்ளார். கோடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பின்னரும் கொடநாடு எஸ்டேட்டிற்கு வராத சசிகலா 7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.