கடந்த 8 ம் தேதி முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றனர். மோசமான வானிலை மற்றும் மேக மூட்டம் காரணமாக குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த வருண் சிங் என்ற அதிகாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முப்படை தளபதிகள், இராணுவ அதிகாரிகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி மரியாதை செலுத்தினர்.  


இதனையடுத்து 13 உடல்களும் தனித்தனியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து உடல்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. படுகாயமடைந்த வருண் சிங் உயர் சிகிச்சைக்காக பெங்களூரூ அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வழி நெடுக காத்திருந்த உடல்களை எடுத்துச் சென்ற வாகனங்கள் மீது மலர் தூவி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். இதேபோல பல்வேறு இடங்களில் இராணுவ வீரர்களுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து நடக்கும் முன்னர் சுற்றுலா பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த காட்சிகளை எடுக்கும் போது கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த அச்சக உரிமையாளர் நாசர் என்பவர் உடனிருந்தார். இது குறித்து நாசர் கூறுகையில், “8ம் தேதி காலையில் ஊட்டி கிளம்பினோம். மேட்டுப்பாளையம் கடந்து போயிட்டு இருக்கும் போது காட்டேரி என்ற இடத்தில் இரயில்வே டிராக் இருந்தது. அந்த இரயில்வே டிராக்கில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தோம். போட்டோ எடுக்கும் போது பத்து நிமிடம் அங்கு இருந்தோம். போட்டோ எடுத்து முடித்த பின்னர் அங்கிருந்து வந்து கொண்டிருக்கும் போது, எனது நண்பர் குட்டி என்பவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். 



வீடியோ எடுக்கும் போது மேலே ஒரு ஹெலிகாப்டர் மேலே நல்ல சவுண்டாக இருந்தது. அதை போகஸ் செய்து எடுத்தார். 2 செகண்டுல ஹெலிகாப்டர் மரத்தில் அடிச்சு கிழே விழுந்தது. கீழே விழுந்ததும் எங்களுக்கு ரொம்ப பயமாகி விட்டது. பதட்டமாகி விட்டது. இதுவரை இந்த மாதிரி பார்த்தது இல்லை. டக்கென அங்கிருந்து கிளம்பி ஒவ்வொரு பெண்டாக 4, 5 பெண்ட்கள் ஏறிப் போய் பார்த்தோம். எங்காவது எதாவது தெரிகிறதா என. ஆனால் எதுவும் தெரியவில்லை. வேறொரு இடத்திற்கு சென்றோம்.


அப்போது தீயணைப்பு துறை, ஆம்புலன்ஸ் எல்லாம் வந்து கொண்டிருந்தது. அவர்களிடம் என்ன விஷயம் என கேட்ட போது, ஹெலிகாப்டர் பயர் ஆகிவிட்டது என்றனர். நாங்களும் அதை பார்த்தோம். எங்களிடம் அந்த வீடியோ இருக்கிறது என போலீஸ்காரரிடம்(தீயணைப்பு) ஷேர் செய்தோம். ஸ்பாட்டுக்கு சென்ற போது கூட்டமாக இருந்தது. அங்கே நிற்காதீர்கள் என சொன்னதால் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டோம். நடந்த சம்பவம் சரியாக 12.24. ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்து விட்டது. நல்ல பனி மூட்டம் இருந்தது. ஹெலிகாப்டர் வரும் போது ஒரு செகண்ட் ஹெலிகாப்டர் நன்றாக தெரியும். அடுத்த செகண்ட் அந்த பனி மூட்டத்துக்குள்ள போனதும், மரத்துல அடிச்சு கீழே விழுந்தது. கீழே விழுந்ததும் டாமர் என சவுண்ட். சத்தம் கேட்டதும் பதட்டம் அடைந்து அங்கிருந்து கிளம்பிட்டோம்” என அவர் தெரிவித்தார்.