கோவை செல்வபுரம் செட்டி வீதியில் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டம் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், விஸ்வகர்மா திட்டம் மாவட்ட வரியாக குழுவாக பதிவு செய்து வருகிறோம். பயிற்சி வகுப்புகள் நடத்தி, அதற்கு தினமும் 500 உதவி தொகை கொடுக்கப்படும் என்றார். பயிற்சிக்கு பிறகு 15 ஆயிரம் கருவிகள் வாங்க கொடுக்கப்படும். பின்னர் எந்த ஆவணமும் இல்லாமல் 1 இலட்சம் தொழில் தொடங்க  கொடுக்கப்படும் என்றார். தொழில் வாரியாக முகாம் நடத்தி இதை பதிவு செய்து வருகிறோம் என்றார்.


இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ஸ்ரீ ராம் என முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, ஜெயிக்க இறைவனை வேண்டுவது தப்பு இல்லை என்றால், முழக்கம் எழுப்புவதும் தப்பு இல்லை. விளையாட்டை விளையாட்டாக பார்க்கவும். அரசியலை அரசியலாக பார்க்க வேண்டும். விளையாட்டில் அரசியல் செய்ய வேண்டாம் எனக் காட்டமாக தெரிவித்தார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கோவை வந்து பிரச்சனை சரி செய்து கொடுத்து வருகிறார் என அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, பருத்தி விலை உயர்வு பிரச்சனைக்கு பியூஸ் கோயல் கோவை வந்து தீர்வு கொடுத்தார்.


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைப்பயணம் தாமதமாக நடைப்பெற்றதற்கு ஏதும் பிரச்சனையா என்ற கேள்விக்கு, மாநில தலைவருக்கு உடல் நிலை சரியில்லை என்று அறிக்கை கொடுத்துள்ளார். அதனால் தான் தாமதம் ஏற்பட்டது எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், லியோ படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டதால் ட்ரெயிலர் பார்த்தேன். முதல் நாள் முதல் காட்சிக்கு எல்லாம் நான் போக மாட்டன். சிரிக்க வைக்கும் படத்திற்கு குடும்பத்துடன் போவது எனது வழக்கம். லியோவில்ல் சர்ச்சை வசனம் வந்தது. இவை சென்சாரில் தவிர்க்க வேண்டும். நானும் சென்சார் போர்டில் இருந்துள்ளேன்.


மேலும் கோவையில் ஆக்கப்பூர்வமான பணிகள் செய்ய முடியும். கோவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என்பதால் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். 200 கோடி சாலை பணிகளுக்கு  ஒதுக்கியும் சாலையில் லாரி சிக்கும் அளவிற்கு சாலை அமைத்துள்ளனர். சாலை போடுகிறார்களா? சப்பாத்தி போடுகிறார்களா? கையில் பேர்த்து எடுக்கும் அளவிற்கு உள்ளது என்றார். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதால் கட்சியில் சோர்வாக இல்லை. உற்சாகத்துடன் பணி செய்து வருகிறோம். கூட்டணி விவகாரம் டெல்லிக்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாங்க கட்சியை வளர்க்கும் பணியை பார்ப்போம் என்றார். பாஜக தனித்து போட்டியா என்ற கேள்விக்கு, நாங்க சொல்ல மாட்டோம் எனப் பதிலளித்தார்.