கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவை மக்கள் சேவை மையம் நடத்தும் 'இதம் திட்டம்' எனும் இளம் பெண்களுக்கான இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரம் துவக்க விழா பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இலவசமாக சானிட்டரி நாப்கின் பெறுவதற்கான அட்டையை மகளிருக்கு வழங்கி சேவையை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில்,"கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை நிறுவும் பணிகளை துவங்கியுள்ளோம்.
வருவாய் குறைந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர் இருக்கின்ற பகுதிகளில் இந்த இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளது. இதன் வாயிலாக ஒரு இயந்திரத்தில் 150 பெண்கள் பயன்படும் வகையில் எலக்ட்ரானிக் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை இந்த இயந்திரத்தில் அந்த கார்டு போட்டால் எட்டு நாப்கின் பேடுகள் இருக்கக்கூடிய பேக்கை எடுக்க முடியும். முற்றிலுமாக இலவசமாக இந்த சேவையை நாங்கள் வழங்குகிறோம். இதற்கு முன்பாகவே இதம் என்கிற திட்டத்தில் நான்காயிரம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் வீட்டிற்கு சென்று சானிட்டரி நாப்கின் வழங்கி வருகிறோம். பாஜக நிர்வாகிகள் மற்றும் மக்கள் சேவை மையம் தன்னார்வ தொண்டர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் இந்த சேவையை செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று தொழில்நுட்ப உதவியோடு இந்த இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. பெண்கள் எதிர்கொள்கின்ற சங்கடங்களை சரி செய்யும் விதமாக இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட சுகாதாரத்தை உறுதி செய்வதையும் இத்திட்டம் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. பெண் சட்டமன்ற உறுப்பினர் என்கிற ரீதியில் பெண்களின் துயரங்களை புரிந்து கொண்டு இது போன்ற சேவையை என்னால் வழங்க முடிகிறது. இன்னும் ஆறு மாத காலங்களில் முக்கியமான பல இடங்களில் இந்த இயந்திரங்களை நிறைவு முடிவு செய்துள்ளோம்.
மழைக்காலங்களில் நீர் நிலைகளில் இருந்து வெள்ளநீர் குடியிருப்பு பகுதிக்குள் செல்வது குறித்து புகார் அளித்துள்ளோம். அதேபோல் ரயில் நிலையம் அருகில் உள்ள லங்கா கார்னர் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி வருகிறது. இதற்காக நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருவதால் எந்த பணிகளும் முறையாக நடைபெறாமல் இருக்கிறது. அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் இடமில்லை எனும் அளவிற்கு தமிழகத்தில் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. எந்த இடத்தில் காய்ச்சல் முகாம் நடத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை. எனவே, கூடுதலாக மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு உரிய மருந்துகளை வழங்கி போர்கால அடிப்படையில் மழை பாதிப்பு சீரமைப்பு பணிகளையும், காய்ச்சல் தடுப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நாத்திக கொள்கை என்பதே சனாதன கொள்கையின் ஒரு பகுதி தான். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும் அரவணைக்கும் பக்குவம் இந்து மதத்தில் உள்ளது. மற்ற மதங்களில் இது இல்லை. மனிதர்களை அரவணைக்கும் பக்குவம் என்பது சனாதன தர்மத்தின் கூறுகள். இதை அமைச்சர் உதயநிதி புரிந்து கொள்ளாததால் தான் நாத்திக கொள்கை வேறு, சனாதன கொள்கை வேறு என பேசிக்கொண்டு இருக்கிறார். பாஜக மாநில தலைவர் கட்சியின் கொள்கையை, மக்களின் நம்பிக்கையை புண்படுத்தாமல், தமிழகத்தில் ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்களின் கொள்கை சார்ந்த கருத்துக்களை முன்வைத்து வருகிறார். பாஜகவின் கொள்கைகளை தான் அண்ணாமலை பேசுகிறார்.
சமூக நீதி ஆட்சி செய்கிறோம் என்கிற பெயரில் திமுக அரசு சமூக நீதிக்கு எதிரான விஷயங்களை செய்து வருகின்றது. குறிப்பாக பட்டியல் இனத்தவர் மீது நடக்கும் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. திமுக அமைச்சர்கள் எப்படி பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களை நடத்துகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். திமுக தலைமை அதற்கு எந்த கண்டன அறிக்கையும் தருவதில்லை. தனியார் வசம் மின்சாரம் வழங்குவது என்பது தவறில்லை. ஆனால் அதை மக்களுக்கு சரியாக விநியோகம் செய்வது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். டிகர் கமல் ஹாசன் தேர்தலின் போது டார்ச்லைட்டை வைத்து என்ன சொல்லி டிவி யை உடைத்தார் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும் என்றார். கோவைக்கு முதலில் போட்டியிடட்டும், அவருக்கு எதிரான வேட்பாளரை கட்சி தலைமை அறிவிக்கும். 2024 தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே எங்களின் முதல் நோக்கம். வேட்பாளர்கள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.