”அண்ணாமலையுடன் வானதி சீனிவாசன் எண்ட்ரி” - மேளதாளத்துடன் வந்து வேட்பு மனு தாக்கல்...
மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் புடைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரும், தேசிய மகளிர் அணித் தலைவியுமான எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், இன்று (ஏப்.06) தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார்.
வேட்புமனுத் தாக்கல் நிகழ்வு, பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன் லால் சர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், தமிழக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றது தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாக, வடவள்ளி லாலி சாலை அருகே தொடங்கிய ஊர்வலம், வேளாண் பல்கலைக்கழகப் பகுதியை கடந்து மேளதாளங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு வானதி சீனிவாசனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தடாகம் சாலையில் அமைந்துள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாளிடம் வானதி சீனிவாசன் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார். இந்த நிகழ்வில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.























