கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






இந்நிலையில் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பாஜக சார்பில் பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, விளக்கேற்றி வழிபாடு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், ”சிலிண்டர் வெடித்து பயங்கரவாத தாக்குதல் நடத்த முயற்சி இறைவன் அருளால் தடுக்கப்பட்டுள்ளது. நுற்றுகணக்கான மக்களை கொல்லும சதி கோவில் வாசலில் முறியடிக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் நடைபெற்று இருகிறது. இறைவனுக்கு நன்றி சொல்ல வழிபாடு செய்தோம்.


சாதாரணமாக நடைபெறும் சம்பவங்களுக்கு, செயல்களுக்கு கூட கருத்து செல்லும் அரசியல்வதிகள் யாரும் கோவைக்கு வரவில்லை. கோவை மக்களுக்கு இந்த மாதிரியான செயல்களுக்கு துணை இருக்க மாட்டோம் என உணர்த்த வந்திருக்க வேண்டாமா? காவல் துறையை தனது கட்டிப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர், கோவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் நிலையல் இடத்தை பார்க்க வராது கண்டனத்திற்குரியது. கோவையை இன்னும் பழி வாங்கும் நோக்குடன் முதல்வர் இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகிறது. உளவுத் துறை முற்றிலும் செயல் இழந்திருக்கின்றது.




ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த இடத்தில் வெடிக்க வைக்க முயன்று இருக்கின்றனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் முதல்வர் கௌரவம் பார்க்க கூடாது. சர்வதேச அளவில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இன்று பா..க நிர்வாகிளுடன் ஆலோசனை செய்த பின் கட்சி தலைவருடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


முதல்வர், அமைச்சர் இருக்கும் மேடைகளிலேயே இந்த அரசாங்கம் மைனாரிட்டி போட்டு இருக்கும் பிச்சை என வெளிப்படையாக பேசுகின்றனர். மைனாரிட்டி மக்கள் ஓட்டுக்காக மற்ற மக்கள் உயிரை பலி கொடுக்கும் முடிவிற்கு முதல்வர் வருகிறாரா? பத்திரிகை அறிக்கை கூட கொடுக்க முடியாத அளவிற்கு மைனாரிட்டி ஓட்டு, முதல்வர் கைகளை கட்டிப்போட்டுள்ளது. எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் உயிரை விட மைனாரிட்டி ஓட்டு உங்களுக்கு பெரியதாக இருக்கிறதா?


பொதுமக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக கூட முதல்வர் பேசவில்லை. திருமாவளவன், சீமான், கம்யூனிஸட் கட்சி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏன் இதில் அமைதியாக இருக்கின்றனர்?. அரசியல் ரீதியாக எதிர் கருத்து சொல்லுங்கள். ஆனால் மக்கள் உயிரோடு சம்மந்தப்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். மக்களை உயிரை காப்பாற்ற களத்தில் இறங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண