கோவை மாநகராட்சி பகுதியில் நிறைவு பெற்ற மூன்று முக்கிய திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கலந்து கொண்டு உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்தனர். பின்னர் அவர்கள் பேருந்தில் பயணம் செய்து பயணிகளுடன் கலந்துரையாடி புதிய வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
₹13 கோடியில் உக்கடம் பஸ் ஸ்டாண்ட்
கோவை மாநகராட்சி பகுதியில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, கோவை உக்கடம் பகுதியில் 13 கோடி ரூபாய் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையம் இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. சுமார் 3.27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் முதற்கட்ட முனையமாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பேருந்து நிலையத்தில் வணிக வளாகங்கள், கழிவறை வசதி, பயணிகள் காத்திருப்பு இருக்கைகள், பொதுமக்களுக்கு இலவச Wi-Fi, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான தனி ஓய்வு அறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனுடன், கவுண்டம்பாளையம் மற்றும் கணபதி மாநகர் பகுதிகளில் தலா 3.36 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட முதல்வர் படைப்பகங்களும் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டன. இந்த திட்டங்கள் மூலம் கோவை மாநகரில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு வசதிகள் மேம்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
