Kongu Region : ’தீவிரமடையும் நெருக்கடி’ தப்பிப்பிழைக்குமா கொங்கு மண்டலம்..?
"தொழிலதிபர்களின் பிரச்சனை மட்டும் அல்ல. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் , அவர்களின் குழந்தைகளின் கல்வி, சிறு வியாபாரிகளின் அன்றாட வாழ்வு ஆகிய அனைத்தையும் பாதிக்கும்"

கொங்கு மண்டலமாக விளங்கும் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களின் முக்கியத் தொழிலாக இருக்கும் ஜவுளித்துறை அடியோடு காலியாகும் நிலையில் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை
அதில், ”திருப்பூர், கோவை, ஈரோடு எனத் தமிழ்நாட்டின் உழைப்பை நெய்து உலகச் சந்தைக்கு அனுப்பும் ஜவுளித் துறை இன்று உயிர் துடிப்போடு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பருத்தி விலை உயர்வு, நூல் விலை ஏற்றம், ஏற்றுமதி ஆர்டர்கள் குறைவு, வங்கி கடன் சுமை மற்றும் வரிக்கொள்கை சிக்கல்கள் ஆகியவற்றின் சுமையில் திணறிய உற்பத்தியாளர்கள் 50 சதவீத உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர் என வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்
தீவிரமடையும் நெருக்கடி
மேலும், ”ஒன்றிய அரசின் 2026–2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் ஜவுளி ஏற்றுமதி ஊக்கத்தொகை, பருத்தி விலை நிலைநிறுத்தம், துறைசார் வட்டி சலுகை போன்ற எதிர்பார்த்த நிவாரணங்கள் இல்லாததால், இந்த நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொழிலதிபர்களின் பிரச்சனை மட்டும் அல்ல. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் , அவர்களின் குழந்தைகளின் கல்வி, சிறு வியாபாரிகளின் அன்றாட வாழ்வு ஆகிய அனைத்தையும் பாதிக்கும் மக்கள் வாழ்வுரிமை சிக்கலாக மாறியுள்ளது.
மின்சார கட்டண சுமை மற்றும் டிமாண்ட் சார்ஜ் குறைப்பு, மாநில ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற உடனடி நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு தாமதமின்றி அறிவிக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தொழிலாளியின் வியர்வை துளிகள் நாட்டை உருவாக்குகிறது
அதே நேரத்தில் பருத்தி விலை நிலைநிறுத்தம், நூல் விலை கட்டுப்பாட்டிற்கான தலையீடு, ஏற்றுமதி ஊக்கத்தொகை, வட்டி சலுகை, வரி அமைப்பு திருத்தம் ஆகிய அடிப்படைத் தீர்வுகளை ஒன்றிய அரசு அவசர முன்னுரிமையுடன் செயல்படுத்த வேண்டும்.
தொழிலாளியின் வியர்வை துளிகள் நெய்து உருவாகும் துணி நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே, ஜவுளி உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
போராட்டம் தீவிரமடையும் முன் ஒன்றிய அரசும் , தமிழ்நாடு அரசும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி, உடனடிப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது” என அந்த அறிக்கையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.























