கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் பழனிச்சாமி உயிரிழந்த மறுநாளே அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சோமனூர் சங்கத் தலைவராக பழனிச்சாமி என்பவர் இருந்து வந்தார். 74 வயதான இவர், வயது மூப்பு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். பழனிச்சாமி விசைத்தறி தொழிலாளர்களுக்காக அவரது வாழ்வில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவர். குறிப்பாக விசைத்தறி தொழிலாளர்களுக்கான இலவச மின்சாரத்திற்காக பல முறை பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுத்தவர். மேலும் கூலி உயர்வு, மின் கட்டண குறைப்பு உள்ளிட்ட விசைத்தறி உரிமையாளர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். 


இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். அவரது உடல் சோமனூர் விசைத்தறியாளர்கள் சங்க கட்டிட வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உயிரிழப்பிற்கு விசைத்தறி தொழிலாளர்கள், விசைத்தறி சங்கங்கள், விவசாய சங்கத்தினர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில் பழனிசாமி மனைவி கருப்பாத்தாளும் இன்று காலை உயிரிழந்தார். இறப்பிலும் இணைபிரியாமல் கணவனும், மனைவியும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் பழனிசாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”விசைத்தறி தொழிலை லாபகரமாக நடத்த வேண்டுமெனவும், விசைத்தறியாளர்கள் முன்னேற்றத்திற்காகவும் பழனிசாமி அரும்பாடுபட்டவர். அவரது இழப்பு அனைத்து பகுதி மக்களுக்கும், அனைத்து விசைத்தறியாளர்களுக்கும் பேரிழப்பு.


விசைத்தறி தொழிலுக்கான மின்கட்டண குறைப்பு தொடர்பாக சென்னையில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்த போது, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் வரமுடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் என்ன நடக்கிறது என்பதை அவர் கேட்டறிந்தார். அமைச்சர் உறுதியளித்தை அடுத்து விசைத்தறி போராட்டத்தை வாபஸ் வாங்கினார். மின் கட்டணத்தை குறைப்பு மற்றும் விசைத்தறிக்கான இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்துதல் ஆகிய அறிவிப்பு தேர்தல் முடிந்ததும் வர உள்ள சூழலில், இதனைக் கேட்க அவரில்லை என்பது வருத்தமகா உள்ளது. இந்த தீர்வுக்காக அவர் எவ்வளவு பாடுபட்டார் என்பதை நான் அறிவேன். விசைத்தறியாளர்கள் நம்பிக்கையாக வாழ்ந்தவர். அவரது இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரைச் சார்ந்தவர்களுக்கும், விசைத்தறி உரிமையாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்து கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண