கோவை அருகே வாய்ப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனத்துறையினர் சிகிச்சையளித்து வருகின்றனர்.


கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இந்நிலையில் காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான வெள்ளியங்காடு பகுதியில் கடந்த ஒரு வாரமாக வாயில் காயத்துடன் ஒரு பெண் யானை சுற்றி வந்தது. அந்த யானை உடல் மெலிந்த நிலையில், மிகவும் சோர்வுடன் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.




இதுகுறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர் அந்த யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த யானையின் வாய்ப்பகுதியில் காயங்கள் இருப்பதால், தீவணங்கள் உண்ண முடியாமலும், தண்ணீர் அருந்த முடியாமலும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த யானையை கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நின்று கொண்டிருந்த பெண் காட்டு யானைக்கு, வனத்துறை மருத்துவர் சுகுமார் மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் வனத்துறையினர் யானையின் கழுத்திலும், பின்னங்கால்களிலும் கயிறுகளை கட்டி யானையை நிறுத்தினர். இதற்கு உதவியாக கும்கி யானை சின்னத்தம்பி காட்டு யானையை பிடிக்க பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.




யானையின் உடல்நிலையை சோதித்த மருத்துவர் சுகுமார், ”பெண் யானையின் நாக்கின் மையப் பகுதியில் வெட்டுக்காயம் உள்ளது. இதனால் கடந்த நான்கு வாரங்களாக உணவு சாப்பிட முடியாமல் யானை சுற்றி திரிந்து வந்துள்ளது. தற்போது யானைக்கு சிகிச்சை அளிப்பதே முதல் பணி. யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். யானையின் உடல்நிலையை பொறுத்து மேல் சிகிச்சை தேவைப்பட்டால் யானையை கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், அது உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின்பு முடிவாகும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். யானைக்கு எதனால் வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானையை பார்ப்பதற்கு ஊர் மக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், அந்தப் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண