பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த 11 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நீக்கிய மத்திய அரசின் முடிவை ஜவுளித் துறையினர் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) அலுவலகத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

Continues below advertisement

இந்த சந்திப்பில் இந்திய ஜவுளி சம்மேளனத் தலைவர் அஸ்வின் சந்திரன், பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கழக துணைத் தலைவர் ரவி சாம், சைமா தலைவர் துரை பழனிசாமி, துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய சைமா தலைவர் துரை பழனிசாமி, பருத்தி ஜவுளி ஏற்றுமதிக்கு உலக சந்தையில் தற்போது சாதகமான சூழல் நிலவுவதாகக் கூறினார். எனினும், உள்நாட்டில் பருத்தி விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமாக இருந்ததால், இந்திய ஜவுளித் துறை அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

Continues below advertisement

இந்நிலையில், ஜூன் 1 முதல் அக்டோபர் 31, 2026 வரை பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத வரி விலக்கு அளித்துள்ள மத்திய அரசின் உத்தரவு, பஞ்சு பற்றாக்குறையை சமாளிக்கவும், தரமான பருத்தி கிடைப்பதை உறுதி செய்யவும் உதவும் என்றார்.

மேலும், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களின் பலன்களை இந்திய ஜவுளித் துறை முழுமையாக பெற இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த முடிவை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுக்கும், வரி நீக்கத்தை பரிந்துரைத்த தமிழக முதல்வர் விஜய்க்கும் ஜவுளித் துறையினர் நன்றி தெரிவித்தனர்.

இந்த வரி விலக்கு மூலம் ஏற்றுமதி அதிகரிப்பதுடன், ஜவுளித் துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் பாதுகாக்கப்படும் என ஜவுளித் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.